INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, June 12, 2021

நூற்றாண்டுச் சோழர்

  கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்

1. சிபி

முன்னுரை .

இவன், எல்லாச் சங்கப் புலவராலும் பிற்பட்ட புலவராலும் சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளான். இவன் வரலாறு பாரதம், இராமாயணம் முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவன், பருந்திற்கு அஞ்சித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறவினைக் காக்கக் தன் தசையைக் கொடுத்தவன் என்பது அனைவரும் அறிந்ததேயாகும்.

இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள்

புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலியன இவனைக் குறிக்கின்றன.

     “ புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
     சினங்கெழு தானைச் செம்பியன் மருக!”

புறநானுாறு

     “தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
     தபுதி அஞ்சிச் சீரை புக்க
     வரையா ஈகை உரவோன் மருக!”

“புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில் இடம்பரிந்த கொற்றவன்.”
சிலப்பதிகாரம்

“உடல்க லக்கற வரிந்து தசை யிட்டும் ஒருவன்
ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்.”
கலிங்கத்துப்பரணி

“உலகறியக்
காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
நூக்கும் துலைபுக்க தூயோன்.”
விக்கிரம சோழன் உலா

“துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச்
சோணாடு”
பெரிய புராணம்

2. முசுகுந்தன்

முசுகுந்தன்என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.

சிவப்பணி

இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன.

நாளங்காடிப் பூதம்

இந்திரன் முசுகுந்தனுக்கு மெய்க்காவலாகுமாறு வலிய பூதம் ஒன்றை அனுப்பினான். அது பூம்புகார் நகரம் சென்று, மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பகுதிகட்கும் இருந்த நாள் அங்காடியில் (பகற்காலக் கடைத் தெரு) இருந்து, தன் பணியைச் செய்து வந்தது.[1] அப்பூதம், புகார் நகரில் இந்திர விழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்பது மணிமேகலை காலத்து மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாகும்.[2] இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள் முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, கந்தபுராணம், ஒரு துறைக்கோவை முதலியவற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இக்குறிப்புகளில் சிறப்பாக அறியத்தக்கது - முசுகுந்தன் காலத்திலே காவிரிப்பூம் பட்டினம் நன்னிலையில் இருந்தது என்பதே ஆகும். இத்துடன், ‘கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே தென் இந்தியா மேனாடுகளுடன் சிறக்க வாணிபம் நடத்தி வந்தது’[3] என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் கூறும் கூற்றை ஒத்திட்டுப் பார்த்தல் இன்பம் பயப்பதாகும்.

3. காந்தன்

வரலாறு

இவன் காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்த சோழ வேந்தன்.இவன் அகத்தியரிடம் பேரன்புடையவன்; அவர் அருளால் காவிரி தன் நாட்டில் வரப்பெற்றவன் என ஒரு குறிப்பு மணிமேகலையிற் காணப்படுகிறது. இவன் பரசுராமன் காலத்தவனாம்; அவன் தெற்கே வருதலைக் கேட்டு (அவன் அரச மரபினரைக் கொல்லும் விரதம் உடையவனாதலின்) அஞ்சி அகத்தியர் சொற்படி, தனக்குப் பரத்தைவழிப் பிறந்த காந்தன் என்பானைச் சோழ அரசனாக்கி, எங்கோ மறைந்திருந்தானாம், பரசு ராமனைப் பற்றிய அச்சம் நீங்கியவுடன் மீண்டு வந்து தன் நாட்டைத் தானே ஆண்டானாம்.[4]

காவிரி வரலாறு

காவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது என்னும் கதை மணிமேகலை காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் வந்தமை வியப்பன்றோ? காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனக் கோடல் பொருத்தமாகும். இதனையே,

     “மேற்குயரக்,
     கொள்ளும் கிடக் குவடு டறுத்திழயத்
     தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும்”

என வரும் விக்கிரம சோழன் உலா அடிகள் உணர்த்துகின்றனவோ? பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்று, ‘காந்தன் காவிரி கொணர்ந்தான்’ என்று கூறிய மணிமேகலை ஆசிரியரே கூறியுள்ளதும் இங்கு நோக்கற்பாலது.

காகந்தி காடு

காந்தன் கந்தனிடம் பூம்புகாரை ஒப்புவித்த பொழுது, “இந்நகரை நின் பெயரால் ‘காகந்தி’ என்று பெயரிட்டுப் பாதுகாப்பாயாக” எனக் கூறினன் என்று மணிமேகலை கூறுகிறது. அன்று முதல் பூம்புகார்க்குரிய பல பெயர்களில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகக் கொள்ளப்பட்டதாம்.

நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையம் (கூடூர்த் தாலுக்கா) பாவித்திரி எனச் சங்க காலத்திற் பெயர் பெற்றிருந்தது. அதனைச் சுற்றியுள்ள நாடு ‘காகந்தி நாடு’ என அங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளது. அஃது ஒரு காலத்தில் கடலால் கொள்ளப்பட்டிருந்ததால் ‘கடல் கொண்ட காந்தி நாடு’ எனவும் பெயர் பெற்றதாம்.[5] இவ்விரிடங்கட்கும் உள்ள தொடர்பு ஆராயத் தக்கது.

4. தாங்கெயில் எறிந்த செம்பியன்

பெயர்க் காரணம்

இச்சோழ மன்னன், ‘வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன்’ ஆதலின், ‘தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனப் பெயர் பெற்றான். இவன் அழித்த அரண்கள் மூன்று எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. சிறந்த வீரன்

இவன் சிறந்த வீரன் என்பது சங்ககாலப்புலவர் கருத்து. இவனை நினைவூட்டித் தம் சோழ அரசர்க்கு வீரவுணர்ச்சி ஊட்டல் அப்புலவர் வழக்கமாக இருந்தது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,

     சார்தல்
     ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
     தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்
     அடுதல்நின் புகழும் அன்றே

இந்திர விழா

‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’[7] என்று மணிமேகலை குறித்துள்ளது.

இவனைக் குறித்துள்ள நூல்கள்

இவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.

     “தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
     நாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.”                                                                                                                                                 சிறுபாணாற்றுப்படை

  “தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை”                                                                                                                                 சிலப்பதிகாரம்


    “வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
    தூங்கும் எயிலும் தொலைத்தலால்                                                                                                                                                                                    பழமொழி


    "தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும்”                                                                                                                                                                          - க. பரணி


    "...................... கூடார்தம்
    துங்கும் எயில் எறிந்த சோழனும்”                                                                                                                                                                                        மூவருலா


கி.மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி
(கி.மு. 290 - 270)

இவன் காலத்திற்றான் தமிழகத்தில் மோரியர் படையெடுப்பு நடந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. பழந்தமிழர், மோரியர்க்கு முற்பட்டுப் பாடலியைத் தலைநகரமாகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர் என்பவரையும் நன்கறிந்திருந்தனர் என்பது பல பாக்களால் அறியக் கிடக்கும் உண்மை ஆகும்.

சந்திரகுப்த மோரியன் காலத்துப் பேரமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில், தமிழகத்திலிருந்து இரத்தினங்கள், சேரநாட்டு வைடுரியங்கள், கருநிறமுள்ள பாண்டிய நாட்டுச் சால்வைகள், மதுரை மெல்லிய ஆடைகள் முதலியன சந்திரகுப்தன் பண்டாரத்திற்கு அனுப்பப்பட்டன’ என்று வரைந்துள்ளமை, தமிழகத்திற்கும் மகதப் பேரரசிற்கும் இருந்த தொடர்பை வலியுறுத்துவதாகும்.இதனால் பழந்தமிழர் நந்தர் பாடலியை மட்டுமே அன்றி, மோரியர் பாடலியையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது அங்கைக் கனியாகும். எனவே, தமிழ்ப் புலவர் தெளிவாக ‘மோரியர்’ எனக் குறித்தல் சந்திர குப்த மோரியர் மரபினரையே ஆகும் என்பதில் ஐயம் இல்லை.மேலும், நம் முன்னையோர் வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங்கினர்: ‘வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்’ என்பதை அவர்களே கூறி, ஆண்டுறைந்தவரை வடுகர் என்றும், அதற்கு (விந்தமலைக்கு) அப்பாற்பட்டவரை வடவடுகர் (அக்கால மகத நாட்டினர்) என்றும் குறித்துள்ளனர். மாமூலனார் என்னும் நல்லிசைப் புலவர் சிறந்த வரலாற்று உணர்ச்சி உடையவராகக் காணப்படுகிறார். அவர் ஒரே செய்யுளில் நந்தரைக் குறித்துப் பின் மோரியர் படையெடுப்பையும் கூறியுள்ளார். புலவர் பலர் இச் செய்தியைக் குறித்துள்ளனர்:

     “கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கனை
     முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
     தென்றிகை மாதிரம் முன்னிய வரவிற்கு”

     “மோகூர்

     பணியா மையின் பகைதலை வந்த
     மாகெழு தானை வம்ப மோரியர்

     “விண்பொரு நெடுவரை இயல்சேர் மோரியர்
     பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த”

     “வெள்வேல்

     விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
     திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”

இச்செய்யுள் அடிகளையும் பின் வரும் அடிகளையும் நன்கு ஆராயின், மோரியர்க்கு உதவியாக வடுகர் என்பாரும் கோசர் என்பாரும் ஆக இருவகைப் படைவீரர் இருந்தனர் என்பது பெறப்படும். இவ்விரு திறத்தாரைக் கொண்ட இரு வேறு படைகளை மோரியர் முன் அனுப்பித் தாம் பின் சென்றதாகப் பாடல் அடிகள் பகர்கின்றன. அடிமைப்பட்ட நாட்டு வீரரை, அவரை ஆட்கொண்ட பிறநாட்டார் தாம் படையெடுக்கும் முன்னர்ப் புகவிடல் இன்றும் நடைபெறுகின்ற வழக்கமே அன்றோ? மகதப் பேரரசை நடத்திய மோரியர், தாம் வென்றடக்கிய வடுக வீரரையும் கோசரையும் இம்முறையில் தம் தமிழகப் படையெடுப்புக்குப் பயன்படுத்தினர்.

வடுகராவார்

     "பனிபடு வேங்கடத் தும்பர்
     மொழிபெயர் தேஎத்தர்”
     “கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்”
     “கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்”

எனப் புலவர் குறித்துள்ளமையின், தெலுங்கரும் கன்னடருமே ஆவர் என்பது பெறப்படுகிறது. கோசர் ஆவார், வடவடுகர் எனப்படுவர். இவர் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவராகலாம் என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கருதுதல் பொருத்தமுடையதே ஆகும். இக்கோசர், ‘சொற்படி நடப்பவர்; அவர் இடம் நெய்தலஞ் செறு எனச் சில அடிகள் குறிக்கின்றன. இம்மோரியர் படையெடுப்பில் இக்கோசர்தம் ஆற்றல் கண்ட தமிழ் மன்னர் அவரைத் தம் சேவகத்தில் வைத்துக் கொண்டனர் போலும்! இக்கோசரே அசோகன் கல்வெட்டுகளிற் கண்ட ‘சத்தி புத்திரர்’ ஆகலாம் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றனர். கோசர் எவரே ஆயினும், தமிழகத்துக்குப் புதியவர் என்பதில் ஐயமில்லை.

மோரியர் படையெடுப்பு

வடுகர், கோசர் என்னும் படைவீரர் தவிர, மோரியர் படை ஒன்று தனியே இருந்தது. அப்படையில் தேர்கள் இருந்தன. எனவே, இத்தமிழகப் படையெடுப்பில் மோரியர் படை, கோசர் படை, வடுகர் படை என மூவகைப்படைகள் இருந்தன.  இம்மூவருள் முன்னுற வந்த கோசர் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பானைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், துளுவ நாட்டைக் கைப்பற்றினர்; அவனது காவல் மிகுந்த பாழி என்னும் இடத்தே வடுகர் தங்கிவிட்டனர். வென்ற நாட்டில் வென்றவர் படை இருந்து பாதுகாத்தல் இயல்பே யன்றோ?

நன்னனை வென்ற கோசர், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பானைத் தாக்கினர்; போர் நடந்தது. முடிவு தெரியவில்லை.  பின்னர் ‘வாட்டாறு’ என்ற ஊரையும் ‘செல்லூர்’ என்பதனையும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த்தனர். அவன் செல்லுர்க்குக் கிழக்கே கோசரோடு, போரிட்டு, வேல் மார்பில் தைக்கப் பெற்று இறந்தான்.  கோசர் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியன் கடுங்கோபம் கொண்டு, புலிக் கூட்டத்துள் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான். பின்னர் அக்கோசர் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணிந்திலது, அப்பொழுது ‘வடுகர்’ படையை முன் விட்டுப் பின் புதிதாக வந்த (வம்ப) மோரியர் - பெரிய தேர்களையுடைய மோரிய வீரர் மோகூரைத் தாக்கினர்; முடிபு தெரிந்திலது. இப்படையெடுப்பில் மோரியர், தம் வரவிற்குத் தடைசெய்த மலையை அல்லது பள்ளத்தாக்கை ஒழுங்கு செய்து வந்தனர் என்பது தெரிகிறது. இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். (6) இங்ஙனம் தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்த வடவடுகரான கோசரை இளஞ் சேட்சென்னி என்னும் சோழன் எதிர்த்து வாகை புனைந்தான்; மேலும் இவன், குறைவினையை முடிப்பதற்காகப் (அரை குறையாகப் பகைவரை முறியடித்து அத்துடன் விடாமல் அவர்களை முற்றிலும் முறியடிக்க) பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகர் தலைகளை அறுத்து அழித்தான். இங்ங்னம் காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணம் பற்றி இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான்.

மோரியர் தோல்விக்குக் காரணம்

இங்ஙனம் வலி மிக்க சோழன் போர் தொடுத்து வென்றமையாற்றான், மோரியர் படை நிலைகுலைந்து தமது கருத்துநிறைவேறப் பெறாமல், தமிழகம் விட்டு மீண்டிருத்தல் வேண்டும். இச்சென்னி பகைவரை எதிர்த்திராவிடின், தமிழகம் மோரியர்க்கு அடிமைப் பட்டிருக்கும். தமிழகத்தின் படை வலிமையையும் இயற்கை அமைப்பையும் பிறவற்றையும் அறியாத வடநாட்டினர் ஆதலின், மோரியர், துளுவநாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று, பிறகு வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடு அடைந்து திதியனிடம் தோல்வியுற்றுப் பல இடங்களில் வழி தெரியாது திரிந்து மீண்டும் சோணாடு புக்கு முறியடிக்கப்பட்டனர்.

இப்படையெடுப்பு மோரியர்க்கு வெற்றியைத் தராமையாலும், தமிழகம் தன்னாட்சி பெற்றே அசோகன் காலத்தும் விளங்கினமையாலும், இளஞ்சேட்சென்னி யால் மோரியர் தோற்கடிக்கப்பட்டனர் என்னும் புலவர் கூற்றுகள் உண்மை என்றே புலப்படுகின்றன. இப்படையெடுப்புச் செய்தியில் சேரர், பாண்டியர் பெயர்கள் காணப்படவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டினனான காரவேலன் தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்து வந்த தமிழரசர் கூட்டமைப்பை அழித்ததாகக் கூறிக் கொள்கிறான். இதனை நோக்க, மோரியர் படையெடுப்புக்குப் பின் தமிழரசர் ஒன்றுபட்டு வடவரை எதிர்த்தனர் என்பது தெரிகிறது.

பிற்கால ஆரியர், கோசர், வடுகர்

கோசர், வடுகர், மோரியர் சம்பந்தப்பட்ட செய்யுட்களை ஒருங்கு கூட்டி நல்லுணர்ச்சியோடு நுணுகி ஆராய்பவர் ஒருவாறு மேற்கூறப் பெற்ற முடிவுக்கே வருதல் கூடும். இப்படையெடுப்பில் தொடர்பற்ற பிற்கால ஆரியர், கோசர், வடுகர் என்று தமிழ்ப்பாக்களில் குறிக்கப் பெற்றவர் வேறு. கி.மு.232-இல் அசோகன் இறப்ப, அவனுக்குப் பின் வந்த சாதவாகனர் (வடுகர்) தம்மாட்சி பெற்று வடவேங்கடம் முதல் கங்கையாறு வரை பேரரசை நிறுத்தி ஆளத் தொடங்கினர். அப்பொழுது தமிழகத்தின் வட எல்லையில் வடுகர் பாதுகாவற்படை இருந்தது. மோரியர் காலத்துக் கோசர் மரபினர் எல்லைப்புறத்தில் நிலைத்தனராதல் வேண்டும். அங்ஙனம் நிலைபெற்ற அக்கோசர், வடுகர், கங்கைச் சமவெளியினின்றும் வடுக நாட்டில் தங்கிய ஆரியர் ஆகிய இவர்கள், பிற்காலத்தே மலையமான், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் முதலியோரால் தாக்கப்பட்டிருக்க வேண்டும்.  இச்செழியன் காலம் சிலப்பதிகார காலம். கி.பி. 150 -200 மோரியர் படையெடுப்பின் காலம் கி.மு. 298 - கி.மு. 272; அஃதாவது அசோகன் தந்தையான பிந்துசாரன் காலம் ஆகும். எனவே ஏறத்தாழ 400 ஆண்டுகட்கு முற்பட்டவரும் பிற்பட்டவரும் ஆகிய கோசர், வடுகர் என்பவர் வேறு வேறானவர். 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழர்

1. மகனை முறை செய்த மன்னவன்

வரலாறு

இவன் திருவாரூரில் இருந்து சோணாட்டை ஆண்டு வந்தவன். இவன் சிறந்த சிவபக்தன். இவனுக்கு வீதிவிடங்கன் என்ற பெயர்கொண்ட ஒப்பற்ற மைந்தன் ஒருவனே இருந்தான். அவன் ஒரு நாள் கோவிலுக்குத் தேரூர்ந்து சென்ற பொழுது பசுங்கன்று ஒன்று திடீரெனப் பாய்ந்தோடித் தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது. இதனை அறிந்த தாய்ப்பசு ஆராய்ச்சி மணியைத் தன் கொம்புகளால் அசைத்து அரசர்க்குத் தன் குறையை அறிவித்தது. நிகழ்ந்ததை அறிந்த சோழ மன்னன், தன் மைந்தனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தித் தான் தேரூர்ந்து சென்றான். பிறகு இறைவன் அருளால் கன்றும் மைந்தனும் பிழைத்ததாகப் பெரிய புராணம் புகழ்கிறது.

இலங்கை வரலாறு

இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் பின்வரும் சுவைதரத்தக்க செய்தியைச் செப்புகிறது:-

“கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் உயர்குடிப் பிறந்த சோணாட்டான் ஒருவன் ஈழத்திற்கு வந்தான். அப்பொழுது இலங்கை அரசனாக இருந்தவன் ‘அசேலன்’ என்பவன். வந்த சோணாட்டான் படையொடு வந்தான் ஆதலின் எளிதில் ஈழத்தரசனை வென்று, 45 ஆண்டுகள் ஈழ நாட்டை ஆண்டான்: அவன் பெயர் ஏழாரன்' என்பது. அவ்வரசன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரு படித்தாகவே நீதி வழங்கினான். தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது பசுங்கன்றைக் கொன்றதாக அத்தனி மகனைக் கிடத்தி, அவன்மீது தானே தேர் ஊர்ந்து கொன்ற உத்தமன். அப்பேரரசன் பெளத்த சமயத்தினன் அல்லன்; ஆயினும், பெளத்தத் துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான். அவனது அரசாட்சி குடிகட்கு உகந்ததாகவே இருந்தது. அவன் ஆண்ட பகுதி இலங்கையின் வடபகுதியே ஆகும். பின்னர் இலங்கை அரசனான துத்தகாமனி என்பவன் ஏழாரனைப் - போரில் வென்று தமிழ் அரசைத் தொலைத்தான்; ஏழாரனைத் துரத்திச் சென்று அநுராதபுரத்தில் எதிர்த்தான். அங்கு நடந்த போரில் ஏழாரன் இறந்தான். தமிழர் சமயக் கொள்கைகள் இலங்கையிற் பரவாமலிருக்கவும் தூய பெளத்தமதத்தைக் காக்கவுமே துத்தகாமனி ஏழாரனை எதிர்த்து வெற்றி பெற்றான். இங்ஙனம் வெற்றி பெற்ற இலங்கை இறைவன் ஏழாரனுக்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தான்; அவன் இறந்த இடத்தில் நினைவுக்குறி எழுப்பி, வழிபாடு நடைபெறச் செய்தான். பின்வந்த ஈழத்தரசரும் அந்த இடத்தை அடைந்த பொழுதெல்லாம் இசை ஒலியை நிறுத்தி அமைதியாக வழிபட்டுச் செல்லல் மரபாகும்.

சோழன் பெயர் யாது?

செயற்கரிய இச்செயலைச் செய்த சோழன் பெயரை, இச்செயலைப் பாராட்டிக் கூறும் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய பழைய நூல்கள் கூறாது விட்டன. கி.பி. 11, 12 - ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் ஆகிய புலவர்கள் இவனை ‘மநு’ நீதிச் சோழன் என்றே கூறிப் போந்தனர். ‘மநு’ மநுநீதி, மநுநூல் என்னும் பெயர்கள் சங்க நூல்களிற் காணுமாறில்லை. பிற்காலத்து நிகண்டுகளிற்றாம் இப்பெயர்கள் காணப்படுகின்றன. செவ்விய கோலோச்சிய நம் சோழன் ‘மனு நீதிச் சோழன், ‘மனு’ என இவனது செயல் நோக்கிப் பிற்காலத்தார் இட்ட பெயரையே சயங்கொண்டார் முதலிய புலவர் வழங்கினராதல் வேண்டும். இச்சோழனை, ‘அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்’ எனச் சிலப்பதிகாரமும், ‘மகனை முறைசெய்த மன்னவன்’ என மணிமேகலையும் குறிக்கின்றனவே அன்றிப் பெயரால் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இவற்றால் இவ்வரசன் பெயர் இன்னது என்பது சிலப்பதிகார காலத்திலும் தெரியவில்லை என்பது தெரிகிறதன்றோ? மேலும், சங்க நூல்களைக் கொண்டு இவனைப் பற்றிய வேறு செய்திகள் அறியக் கூடவில்லை.

வரலாற்று ஒப்புமை

சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சோழன் மகனை முறை செய்த ஒன்றையே குறிக்கின்றன. ஆயின், பெரிய புராணம் ஒன்றே இவனுடைய சிவப்பற்று முதலிய நல்லியல்புகளை விரிவாகக் குறிக்கின்றது. இவ்வியல்புகளனைத்தும் மகாவம்சம் குறிக்கும் தமிழ் அரசனிடம் காண்கின்றன. பெயர் ஒன்றே வேறுபடுகிறது. ‘ஏழரசன்’ என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம், அல்லது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் சயங்கொண்டார், கூத்தர், சேக்கிழார் ஆகியோரைப் போலப் பெயரைத் தவறாகவும் குறித்திருத்தல் கூடியதே. ஆதலின், பெயர் கொண்டு மயங்க வேண்டுவதில்லை. மகனை முறை செய்த நிகழ்ச்சி எங்கு நடந்ததென்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறவில்லை. சேக்கிழார் ஒருவரே அச்செயல் திருவாரூரில் நடந்ததாகக் கூறியுள்ளார்.[5] மகனை முறை செய்த நிகழ்ச்சியைக் குறிக்கும் கல் தேர் திருவாரூரில் கோவிலுக்கு அண்மையில் இருக்கின்றது. இச்சோழன், மகனை முறை செய்த பிறகு, இலங்கையைக் கைப்பற்றி முறை வழுவாது ஆண்டிருக்கலாம்.

இலங்கைப் படையெடுப்பு நடந்திருக்குமா?

‘கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழ் அரசன் ஒருவன் இலங்கையை வென்று 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று இலங்கை வரலாறே கூறுதல் மெய்யாகத்தானே இருத்தல் வேண்டும்? ஆயின், அப்பழங்காலத்தில், கடல்சூழ் இலங்கையைக் கைப்பற்றத் தக்க கப்பற் படை சோழரிடம் இருந்ததா? அதற்குச் சான்றுண்டா?

கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே சோழர் முதலிய தமிழரசர் மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்தினர் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்திக் கொண்டிருந்த நாட்டாரிடம் கடற்படை இருந்தே தீர வேண்டும் என்பது கூறாதே அமையும். இன்றுள்ள ஆங்கிலேயர், ஜப்பானியர், அமெரிக்கர் முதலியோர் கடல் வாணிகத்திற்காகவன்றோ, கப்பற்படை வைத்துள்ளனர். இஃதன்றி, அப்பழங் காலத்தே கடல் கடந்து நாடு பிடித்தல் வேண்டும் என்ற வேட்கையும் சோழ மன்னரிடம் இருந்தது. நாம் முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 முதல் கி.மு. 90 எனக் கொண்டோம் அன்றோ? அம்முதற் கரிகாலனைப் பாடவந்த வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவர்,

“நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் காற்றுக் கடவுளை அழைத்து ஏவல் கொண்ட (காற்று வீசச் செய்து மரக்கலம் செலுத்திச் சென்று வெல்ல விரும்பிய நாட்டை வென்ற) வலிய அரசன் மரபில் வந்தவனே!” என்று ஒரு செய்யுளிற் பாடியுள்ளார். இதனால் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றுப் பகுதியில் இருந்த முதற் கரிகாலனுக்கு முற்பட்ட சோழ மன்னருள் ஒருவன் (பாட்டனாக அல்லது முற்பாட்டனாக இருக்கலாம்) கடல் கடந்து நாடு வென்றமை[6] அறியப்படுகிறது.

அந்நாடு எது?

சிறப்பாகத் தமிழகத்தை அடுத்து இருப்பது இலங்கைத் தீவேயாகும். பிற நெடுந்தொலைவில் இருப்பன. அவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டினனான இராஜேந்திர சோழனால் வெல்லப்பட்டவை; அதற்குமுன் எத்தமிழரசரும் சென்று வென்றதாக வரலாறு பெறாதவை. கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதல் பன்முறை வெல்லப் பெற்றும் ஆளப்பெற்றும் வந்தது இலங்கை ஒன்றே என்பது வரலாறு அறிந்த உண்மை. ஆதலின் புதிய சான்றுகள் கிடைக்கும் வரை, மேலே குறிப்பிடப்பெற்ற படையெடுப்பு இலங்கை மேற்றே எனக் கோடலில் தவறில்லை. அங்கனமாயின், அதன் காலம் யாது?

‘சோழர் இலங்கைமீது படையெடுத்த முதற்காலமே கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி’ என்று மகாவம்சமே கூறலால், அதுவே, மேற்குறித்த படையெடுப்பு நிகழ்ந்த காலம் எனக் கோடல் பொருத்தமாகும், அஃதாயின், ஏறத்தாழக் கி.மு. 160-கி.மு. 140 எனக் கூறலாம். அக்காலம் முதற் கரிகாலனுடைய தந்தை அல்லது பாட்டன் இருந்த காலமாகும். இது மேலும் ஆராய்தற்குரியது.

2. முதற் கரிகாலன்

(கி.மு. 120 - கி.மு. 90)

சென்னி - கிள்ளி மரபினர்

முதற் கரிகாலன் ‘சென்னி’ மரபைச் சேர்ந்தவன், சென்னி மரபினர் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். "கிள்ளி" மரபினர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டனர்.

கோநகரங்கள்

முதற்கரிகாலன் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டிருந்தான், பிறகு குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான்.

போர்கள்

இக்கரிகாலன் பதினோரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தரையும் (சேர பாண்டியர்?) வெண்ணி வாயில் என்ற இடத்திற் பொருது வென்றான். இச்சோழன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் அரசர் ஒன்பதின்மரைப் போரில் புறங்காட்டி ஒடச் செய்தான். இவனுடைய தானைத் தலைவன் திதியன் என்பவன். அவனிடம் பண்பட்ட போர்த் தொழிலில் வல்ல கோசர் என்னும் வடநாட்டு வீரர் இருந்து வந்தனர். அவர்கள் எக்காரணம் பற்றியோ ‘அன்னிதிமிலி’ என்ற பெண்ணின் தந்தையினுடைய கண்களைப் பறித்து விட்டனர். அவள் துயரம் மிகுந்தவளாய்த் திதியனிடம் சென்று முறையிட்டாள். அங்கனம் அவள் முறையிட்ட இடம் அழுந்துாராகும்.[10] இக்கரிகாலன் யாது காரணம் பற்றியோ, சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் வெண்ணிப்பறந்தலை யிற் போர் செய்தான். போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற் பட்ட புண்ணைப் புறம் புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து. பட்டினி கிடந்து உயிர் விட்டனன். இதனால், அற்றை நாளில் முதுகிற் புண்படல் தோல்வியாகக் கருதப் பட்டதென்பதை அறிலாம். வடக்கிருந்த பெருஞ்சேரலாதனைக் கழாத் தலையார் என்ற புலவர் பாடித் தம் துயரத்தை அழகுற விளக்கியுள்ளார். வென்ற முதற் கரிகாலனை வெண்ணிக் குயத்தியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் பாராட்டிப் பாடியுள்ளார்.

“நீர் நிறைந்த பெருங்கடலில் மரக்கலத்தை ஒட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் வளிச்செல்வனை (காற்றுக் கடவுளை) அழைத்து ஏவல் கொண்டு (காற்று வீசச் செய்து) மரக்கலம் செலுத்திக் குறித்த நாட்டை வென்ற வலிய அரசன் (இவன் யாவன் என்பது தெரியவில்லை) மரபில் வந்தவனே, மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே மேற்சென்று போரை எதிர் நின்று கொன்ற நினது வலிதோற்ற வென்றவனே, தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய ‘வெண்ணி’ என்னும் ஊர்புறத்துப் போர்க்களத்தின் கண் மிக்க புகழை உலகத்துப் பொருந்திப் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த பெருஞ் சேரலாதன் அவ்வாறு இருத்தலால் நின்னினும் நல்லன் அல்லன்.”


கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்

இரண்டாம் கரிகாலன்

முன்னுரை

இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய பல பெயர்களைப் பெற்றான். இவனது வரலாற்றை விரிவாக அறிவதற்குச் சிலப்பதிகாரம், பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, எட்டுத் தொகையுள் உள்ள சில பாடல்கள், கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் ஆகிய அனைத்தும் துணை செய்கின்றன - ரேனாண்டு சோழர் முதல் கி.பி.14-ஆம் நூற்றாண்டு வரை பொத்தப்பி, நெல்லூர், சித்துார் முதலியவற்றை ஆண்டு வந்த தெலுங்கச் சோழரும் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டு மகிழ்ந்தனர். எனின், இவனது பெருமையை என்னென்பது! கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர் என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் அருஞ்செய்தியாகும். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். எனின், இவன் வீரச் செயல்களும் சோழப் பேரரசை நிலை நாட்டிய இவனது பெருந் திறமையும் தமிழகத்தில் மறவாது போற்றப்பட்டமையும் அவ்வக் காலப்புலவர் தத்தம் நூல்களில் அவற்றைக் குறித்து வந்தமையுமே காரணமாகும். இனி, இப்பெருமகன் வரலாற்றை முறைப்படி காண்போம்.

இளமையும் அரசும்

இவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ என்ற பெயரானே, இவன் தந்தை முடி புனைந்து அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன்; அரசு பெறாதே காலங் கழித்தவன் என்பது பெறப்படுகிறது. இவன் அழுத்துார் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி நல்லோரையில் கரிகாலனைப் பெற்றாள். கரிகாலன் வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தனன்; தந்தையும் இறந்தனன். இறந்த அரசன் மைந்தன் பட்டம் பெற முனைந்தனனே, அன்றி யாது நடந்ததோ தெரியவில்லை; நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். நாட்டில் இருந்த நல்லறிஞர் பண்டைக்கால வழக்கம் போலக் கழுமலத்து  இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவினான். அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.

பின்னர் யாது நடந்ததென்பது விளங்கவில்லை. தாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர்; அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி வெளிப்போந்தான். தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் என்ற நல்லிசைப் புலவர் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.

இவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால் ‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது?

போர்ச் செயல்கள்

இவனுடைய போர்ச் செயல்கள் பொருநர் ஆற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன:

(1) இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர அவாவிச் சேர பாண்டியருடன் போரிட்டான். போர் ‘வெண்ணி’யில் நடைபெற்றது. ‘முருகன் சீற்றத்து உருகெழுகுரிசி’லான கரிகாலன் அவ்விரு வேந்தரையும் வெண்ணிப் போரில் அவியச் செய்தான். இதனைப் பொருநர் ஆற்றுப் படை பாடிய முடத்தாமக் கண்ணியார்,

     “இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
     அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
     ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
     இருபெரு வேந்தரும் ஒருகளத்(து) அவிய
     வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
     கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.”

என்று சிறப்பித்துள்ளார்.

கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள் நாகர் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான், பிறகு தென்பாண்டி நாட்டை அடிப்படுத்தி மேற்கே சென்றான்.

கற்கா (பாலக்காடு), வேள் நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வடமலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்தான்; அந்நாடுகளை வென்று கரிகாலன் தன் பேரரசிற் சேர்த்துக் கொண்டான்.

இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றனன்; இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடங்கியவர் ஆக்கினன்.

இங்ஙனம் தமிழகத்தை அடிப்படுத்திய கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்றான்; அந்நாட்டில் ஓரிடத்தினின்றிக் கண்டவாறு அலைந்து திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று, தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான்; 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினான்.

பின்னர்க் கரிகாலன் மலையமானாட்டை அடைந்தான். இது பெண்ணையாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டது. இதனை ஆண்டவன் மலையமான். இவன் சோழன் ஆட்சிக்கு உட்பட்டவன் ஆயினான். வடுகநாடு

வேங்கடம் வரை வெற்றிகொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ் சேனையுடன் புறப்பட்டான்; வடுகர் சிற்றரசர் பலரை வென்றான்.

வடநாடு

பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டான், அப்பொழுது மகதப் பெருநாடு சுங்கர் ஆட்சியிலிருந்து கண்வ மரபினர் ஆட்சிக்கு மாறிவிட்ட காலமாகும். கி.மு. 73-இல் வாசுதேவ கண்வன் மகதநாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் கண்வர் மூவர் கி.மு. 28 வரை ஆண்டனர். அதற்குப் பிறகே மகதப் பெருநாடு ஆந்திரர் ஆட்சிக்கு உட்பட்டது. வலியற்ற கண்வர் ஆண்ட காலத்திற்றான் கரிகாலன் வடநாட்டுச் செலவு ஏற்பட்டதாதல் வேண்டும். அக்காலத்தில் கோசாம்பியைக் கோநகராகக் கொண்ட வச்சிரநாடும், உச்சையினியைத் தலைநகராக கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். அதனாற் போலும், கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான்; வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்; அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. பின் இரு வேந்தரும் சந்திரகுப்த மோரியன் காலமுதல் சிற்றரசராகவே அடிமைப்பட்டு ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்று வரலாறு கூறுதல் நோக்கத்தக்கது.

ஈழநாடு

இங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற் படை வீரரை அழைத்துக் கொண்டு இலங்கைத் தீவை அடைந்தான்; அதனை வென்று, தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆளவிட்டு மீண்டான்; மீண்டபோது பன்னிராயிரம் குடிகளைச் சோணாட்டிற்குக் கொணர்ந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

சோழப் பெருநாடு

கூடுரும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ‘காகந்திநாடு’ என்று கல்வெட்டுகளிற் கூறப்படுகின்றன. ‘காகந்தி நாடு’ பற்றிய குறிப்பு பழங்காலத்ததாகக் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட மணிமேகலையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பிற்காலத்தில் ஆண்ட ரேனான்டு, பொத்தப்பிச் சோழர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ எனக் கல்வெட்டுகளிற் குறித்துள்ளனர். ‘காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தான்; தொண்டை மண்டலத்தைக் காடுகெடுத்து நாடாக்கினான்’ என்றெல்லாம் கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் முதலிய அருந்தமிழ் நூல்கள் அறைகின்றன. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்கி, நடுநிலைமையினின்று ஆராயின், கரிகாலன் காலத்துச் சோழப் பெருநாடு வட பெண்ணையாறு முதல் கன்னிமுனைவரையும் பரவி இருந்தது, என்னில் முற்றிலும் பொருத்தமாகும்.

அரசியல்

தொண்டை நாடு: தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் வளப்படுத்திய பெருமை சங்ககாலத்தில் கரிகாற் சோழற்கே சாரும். இவன் தான் வென்ற தொண்டை நாட்டைத் திருத்தினான். காடுகளை வெட்டி, மக்கள் உறைதற்கேற்ற சிற்றுார்கள் ஆக்கினான்; அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்கள் ஆக்கினான். தொண்டை நாட்டை 4 கோட்டங்களாக அமைத்தான். அவையாவன: 1. ஆம்பூர் 2. இளங்காடு 3. ஈக்காடு 4.மணவில் 5. ஊற்றுக்காடு 6. எயில் 7. கடிகை 8. கலியூர் 9.களத்துார் 10. குன்றவட்டானம் 11. சேத்துர் 12. செங்காடு 13. செந்திருக்கை 14. செம்பூர் 15. தாமல் 16. படுவூர் 17.பல்குன்றம் 18. புழல் 19. புலியூர் 20. பையூர் 21.வெண்குன்றம் 22, வேங்கடம் 23. மணவூர் 24, வேலூர்.

தொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம், கரிகாலன் அதனை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தான் அங்குப் பலரைக் குடியேற்றினான்; தொண்டை நாட்டை ஆண்டுவருமாறு தன் மரபினன் ஒருவனை (இளந்திரையன்?) விட்டுத் தன் நாடு மீண்டான்.

சோணாடு: சோழநாடு என்றும் சோற்றுக்குப் பஞ்சமின்றி இருக்கச் செய்தவன் இவ்வளவனே. இவன் ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ யாற்றுப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற உளங் கொண்டான்; ஆற்றின் இருமருங்கும் கரை அமைக்க முடிவு செய்தான். உடனே காவிரியாறு எந்தெந்த ஊர் வழிச் செல்கிறதோ, அவ்வூர் அரசர்க்கெல்லாம் கரை கட்டுமாறு திருமுகம் போக்கினான்; அத்துடன் அவரவர் பங்கையும் அளந்து கொடுத்தான். இக்கட்டளைப்படி சிற்றரசர் அனைவரும் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பதாயிரம் மக்களும் முயன்று கரை அமைத்தனர். கரை அமைப்பு வேலை முடிந்தபின்,  கரிகாலன், பற்பல வாய்க்கால்களையும் வடி மதகுகளையும் அமைத்துத் தண்ணிரை அழிவுறாமற் பாதுகாத்து, வேளாண் வாழ்க்கையை விழுமியதாக்கினான். இப்புதிய முயற்சியால் சோணாடு பொன் கொழிக்கும் நாடாயிற்று. நாடு வளம் பெறச் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ எனப்புலவர் பாராட்டலாயினர். அன்று முதல் கரிகாலன் ‘கரிகாற் பெருவளத்தான்’ எனப்பட்டான். காவிரியாறு ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது.பொன்னிநாட்டைஆண்டமையால், சோழரும் அதுமுதல் ‘வளவர்’ எனப்பட்டனர்.சோணாட்டின் சிறப்பைப் பொருநர் ஆற்றுப் படையுள் கண்டு மகிழ்க!

இவன் காவிரியாற்றை ஒழுங்குபடுத்தியதன்றிப் பல குளங்களைப் புதியனவாக எடுப்பித்தான்; கோவில்களைக் கட்டினான்; கோட்டை கொத்தளங்களை ஆங்காங்கு அமைத்தான் என்று பட்டினப்பாலை பகர்கின்றது.

அமைதியுடைய வாழ்க்கை: இவனது தலைநகரமான பூம்புகாரில் கடற்கரை ஓரம் வாணிபத்தின் பொருட்டுச் சோனகர், சீனர், சாவகர் முதலிய பல நாட்டாரும் விடுதிகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்; அவர்களுடன் உள்நாட்டு மக்களும் கலந்து உறவாடினர்; இரு திறத்தாரும் மனமொத்து வாழ்க்கை நடத்தினர். பெளத்த, சமண, வைதிக சமய மக்களும் பண்டைத் தமிழரோடு அமைதியுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதற்கென்ன காரணம்? கரிகாலனது செங்கோற் சிறப்புடைய அரசியலே அன்றோ?

முறை வழங்கல்: கரிகாலனிடம் ஒருகால் முதியவர் இருவர் முறை வேண்டி வந்தனராம். அவர் இவனது இளமைத் தோற்றத்தைக் கண்டு ஐயுற்றனராம். அஃதுணர்ந்த இவன் முதியவன் வேடங்கொண்டு வழக்கைக் கேட்டு நேரிய தீர்ப்புக் கூறினனாம். அம்முதியவர் மனங்களிப்புற்றனர். உடனே அவன் தன் பொய் வேடத்தை அவர் முன் நீக்க, அவர்கள் இவனது பேராற்றலைக் கண்டு வியந்தனர், அதே சமயம் இவனது திறமையை ஐயுற்றமைக்கு நாணினராம். இச்செய்தி பழமொழி, முதலிய நூல்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

கடல் வாணிகம்: இம்மன்னன் காலத்தில் கடல் வாணிகம் சிறப்புற நடந்து வந்ததென்னலாம். பூம்புகார்ப் பட்டினத்தை வளப்படுத்திய பெருமை இவனைச் சார்ந்ததே ஆகும். அந்நகரில் பலபாடை மக்கள் கடல் வாணிகத்தின் பொருட்டுத் தங்கியிருந்தனர் என்பதை நோக்கக் கடல் வாணிகம், உயர்ந்த முறையில் நடைபெற்றதை நன்குணரலாம். புகார் நகர் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்தது. காவிரியின் இருமருங்கும் பூம்புகார் அமைந்திருந்தது. அவ்வாற்றில் மரக்கலங்கள் சென்று மீளத் தக்கவாறு ஆழ்ந்து அகன்ற துறைமுகம் இருந்தது. கடற்கரை ஓரம் கலங்கரை விளக்கம் இருந்தது; இறக்குமதியாகும் பண்டங்களைத் தீர்வை வரையறுத்துக் கடமை (custom) கொள்ளும் ஆயத்துறை (Custom House) கள் இருந்தன; பிறகு அப்பண்டங்கட்குச் சோழனது புலி இலச்சினை இட்டு, அவற்றை இட்டு வைக்கும் பண்டசாலைகள், கிடங்குகள், உயர்ந்த மேடைகள் இருந்தன. இறக்குமதியான பொருள்கட்குக் கணக்கில்லை. அவற்றின் விவரம் யாவும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், ஊர்காண் காதை உரை இவற்றிற் கண்டு தெளிக: விரிப்பிற் பெருகும். இக்குறிப்புகள் அனைத்துடனும், கீழ்க்கரை ஓரம் கிடைத்துள்ள ரோம நாணயங்களையும், சாதவாகனர் நாணயங்களையும் நோக்க - வெளிநாட்டு உள்நாட்டு வாணிகம் நடந்து வந்த உயர் நிலையை நன்குணரலாம். சுருங்கக் கூறின், கரிகாற் பெருவளத் தானது அரசாட்சி ‘பொற்கால ஆட்சி’ எனக்கூறலாம்.

செந்தமிழ் வளர்ச்சி: இச்செங்கோல் வேந்தர் ஆட்சியில் தமிழ் செம்மையுறவே வளர்ச்சிபெற்று வந்ததென்பது கூற வேண்டுமோ? இவனது தாய் மாமனான இரும்பிடர்த் தலையாரே பெருந்தமிழ்ப் புலவர்; அவராற் பாதுகாப்புப் பெற்ற இவனும் சிறந்த தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் என்பதில் வியப்பில்லை. இவனைப் பாராட்டிய புலவர் பலராவர். அவருள் இவனை பட்டினப்பாலையாற் புகழ்ந்து பாராட்டிய பெரும் புலவர் உருத்திரன் கண்ணனார் என்பவர். இவன் அவர்க்கு 16 லக்ஷம் பொன் பரிசளித்தான் என்பர். பட்டினப்பாலை படித்து இன்புறத்தக்க அழகிய நூலாகும். இவன் மீது பாடப்பெற்ற மற்றொரு பெரிய பாட்டு பொருநர் ஆற்றுப்படை என்பது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர். அப்பாவில் இவனுடைய போர்ச் செயல்கள், குணாதிசயங்கள் இன்னபிறவும் செவ்வனே விளக்கப் பெற்றுள்ளன. இவன் வரலாற்றை அறிய அது பெருந்துணை செய்வதாகும். இவனைப்பாடிய பிற புலவருள் காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் என்பவர் ஒருவர். இவர், கரிகாலன் தன் நண்பனான பாண்டியன் வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியுடன் இருந்த மகிழ்ச்சி மிக்க நேரத்திற் சந்தித்து, இருவரையும் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளார். கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் மருத்துவன் தாமோதரனார் என்பவர். இவர் கரிகாலனது அரசியற் பொறுப்பை நன்கு உணர்ந்து, கடற்கரை இடத்துக் கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்லும் வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒப்பாய் நீ’ என விளக்கியிருத்தல் பாராட்டத்தக்கது. இவர் பின்னும் ‘வெற்றியாக முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய நினது வெண்கொற்றக் குடை உவாமதி போன்றது என்று நினைந்து நின்பால் பரிசில் பெற யான் வந்தேன்” எனக் கூறுதல், கரிகாலனது செங்கோற் சிறப்பை உணர்த்தி நிற்கின்றதன்றோ?

இக்கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்பவர். இவர் சென்றவுடன் கரிகாலன் பரிசில் தரவில்லை: எக்காரணம் பற்றியோ காலம் தாழ்த்தான். அப்பொழுது புலவர் வருந்தி ஒரு பாட்டைப் பாடினார்; அதன் அகத்துக் கரிகாலன் சிறப்பைப் பொது முறையிலே வைத்துக் கூறியிருத்தல் கவனித்தற்குரியது.

“கரிகாலன் காற்று இயங்கினாற்போலும் தாவுதலை உடையதாகிய கதியையுடைய குதிரையுடன் கொடி நுடங்கும் உச்சியைக் கொண்ட தேர் உடையவன்; கடலைக் கண்டாற் போலும் ஒளி பொருந்திய படைக் கலங்களைக் கொண்ட சேனை வீரரை உடையவன்; மலையோடு மாறுபட்டுப் பொரும் களிறுகளை உடையவன் இடி முழங்கினாற் போலும் அஞ்சத்தக்க முரசம் உடையவன்; போரில் மேம்படும் வெற்றியை உடையவன்.”

இக்கரிகாலனைப் பிற்காலத்திற் பாடிய புலவர் பலராவர். அவர்கள் பரணர், நக்கீரர், இளங்கோவடிகள் சயங்கொண்டார், சேக்கிழார் முதலியோர் ஆவர். இவன் காலத்தில் தமிழ்மொழி சிறந்த நிலையில் இருந்தது என்பது சங்க நூல்களைக் கொண்டு நன்கறியக் கிடக்கிறது. இவன், புலவர்தம் கல்வித் திறத்தைச் சீர்தூக்கிப் பட்டி மண்டபத்தையும் நல்லாசிரியர் ஒருங்கிருந்து ஆராய்ச்சி செய்யத்தக்க கலைக் கழகங்களையும் அமைத்த அறிஞன் ஆவான். இப்பெருந் தகையாளன் புலவர்களை நன்கு வரவேற்று வேண்டிய நல்கித் தனக்கு அவர் மாட்டுள்ள ஆர்வமிகுதியால், அவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் கடப்பாடு உடையவனாக இருந்தான். வடபெண்ணையாறு முதல் குமரிமுனை வரைப்பட்ட பெருநாட்டைத் தன் ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் சோழன், புலவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் பழக்கம் உடையவனாக இருந்தான் எனின், இப்பெருமகனது பெருந்தன்மை யையும் தமிழ்ப்புலவர் மாட்டு இவன் வைத்திருந்த பெருமதிப்பையும், சிறப்பாகத் தன் தாய்மொழி வளர்ச்சியில் இவனுக்கிருந்த தனிப்பற்றையும் என்னெனப் புகழ்வது! இத்தகைய தமிழ்ப் பேரரசர் அரும்பாடு பட்டு வளர்த்த சங்கத் தமிழாற்றான் - நாம் இன்று ‘தமிழர்’ எனத் தருக்குடன் நிற்கின்றோம் என்னல் மிகையாமோ?

கலைகள் : கரிகாலன் காலம் செழித்த காலமாதலின் பல கலைகளும் ஓங்கி வளர்ச்சியுற்றன என்பதில் ஐயமில்லை. இசை, நாடகம் முதலியன வளர்ந்தோங்கின என்பது பொதுவாகச் சங்க நூல்களைக் காணும்போது நன்கறியலாம். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாதவி நடித்தபோது இருந்த பல்வகை ஆசிரியர், கருவிகள், நடிப்பு முறைகள் இன்னபிறவும் கரிகாலன் காலத்தில் நன்னிலையில் இருந்தன என்பதில் ஐயமுண்டோ? 

சமயம்: கரிகாலன் காலத்தில் சோழ நாட்டில் பல சமயங்கள் இருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் வேண்டுகோட்படி தமிழரசர் பெளத்த சமயப் பிரசாரத்திற்கு நாட்டில் இடம் தந்தனர். அன்று முதல் சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்தப் பள்ளிகளும் விகாரங்களும் பெருகின. கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிகாரம் இருந்திருத்தல் வேண்டும்; இங்ஙனமே சமணப் பள்ளிகளும் இருந்திருத்தல் வேண்டும்; வேதியர் வடநூல் முறைப்படி வேள்விகள் செய்து வந்தனர். இவரன்றி வாணிகத்தின் பொருட்டுச் சோணாடு புக்க பல நாட்டு மக்கள் கொண்டிருந்த சமயங்கள் பலவாகும். இங்ஙணம் பற்பல சமயத்தவர் சோணாட்டில் இருந்தாலும், அவரனைவரும் ஒருதாயீன்ற மக்களைப் போலக் கரிகாலன் ஆட்சியில் கலந்து உறைந்தனர். அரசனும் எல்லாச் சமயத்தவரையும் மதித்து நடந்து வந்தான். கரிகாலன் தனக்கெனக் கொண்டிருந்த சமயம் சைவம் ஆகும். இவன் காஞ்சி நகரில் உள்ள பண்டைக் கோவிலாகிய ஏகம்பவாணர் திருக்கோவில் திருப்பணி செய்து வழிபட்டான். இவனது திருத்தொண்டினைச் சைவ சமயக் குரவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினருமாகிய திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

    “விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார்
    கண்ணுளார் கழலின் செல்வார் கரிகாலனை
    நண்ணுவார் எழில்கொள கச்சிநகர் ஏகம்பத்(து)
    அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே.”

இவனது உருவச் சிலை ‘ஏகாம்பரநாதர்’ கோவிலில் இருக்கிறது. இவன் வைதிக வேள்விகளையும் செய்தவன் ஆவன்.

இவனது அணிமிக்க கோநகரான காவிரிப் பூம்பட்டினத்தில்,

    “நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
    பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா” கப்

பல கோவில்கள் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.

பிற அரசர்கள்: அக்காலத்துப் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியாவன்; சேர அரசன் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை என்பவன்; சிற்றரசர் - ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்துர்க் கிழான் தோயன் மாறன், சோழியஏனாதி திருக்குட்டுவன், கரிகாலனிடம் தோற்ற இருங்கோவேள் முதலியோர் ஆவர்.

அரச குடும்பம்: கரிகால் வளவன் தந்தை இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் மகள் என்பது முன்பே கூறப்பட்டது. இவன் நாங்கூர் (சீகாழித் தாலூகா) வேள் மகளை மணந்து கொண்டான்.[ இவளன்றி வேறு மனைவியர் சிலரும் இருந்தனர். ஆதிமந்தியார் என்ற மகளும் இருந்தனள் என்பர். இக்கூற்று ஆராய்ச்சிக்கு உரியது.

இறுதி : கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் சோழப் பேரரசை ஏற்படுத்தி ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.


கிள்ளி வளவன்

முன்னுரை: இவன் முன்சொன்ன நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியவர்க்கு அடுத்து இருந்த பெரிய அரசன் ஆவன். என்னை? அவ்விருவரையும் பாடிய புலவர் பலரும் இவனை நேரிற் பாடியிருத்தலின் என்க. இவன் உறையூரை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன். இவனைப் புலவர் ஒன்பதின்மர் 18 பாக்களிற் பாடியுள்ளனர். இவனை அகநானூற்றில் ஒர் இடத்தில் நக்கீரர் குறித்துள்ளார். இவனைப் பற்றிய பாடல்களால் இவன் சிறந்த போர் வீரன், சிறந்த புலவன், புலவரைப் பற்றிய புரவலன், கரிகாலன் நலங்கிள்ளி போன்ற சோழப் பேரரசன் என்பன எளிதிற் புலனாகின்றன.

போர்ச் செயல்கள்: இவன் செய்த போர்கள் பல என்பது பல பாடல்களால் விளங்குகிறது.இடம் குறிக்காமலே பல பாடல்கள் போர்களைக் குறிக்கின்றன; இவன் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்தவன்; அரசர் பொன் மகுடங்களைக் கொண்டு தனக்கு வீரக்கழலைச் செய்து கொண்டவன், எட்டுத் திசையும் எரி கொளுத்திப் பல கேடுகள் நிகழப் பகைவர் நாட்டை அழித்தவன்; காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய போரில் மிக்கவன். வேந்தரது பாடி வீட்டின்கண் குருதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலாலையுடைய போர்க் களத்தை உண்டாக்கிய போர் செய்யும் படையை உடையவன். மண்டிய போரில் எதிர் நின்று வெல்லும் படையையும் திண்ணிய தோள்களையும் உடையவன்; வாள் வீரரும் யானையும் குதிரையும் உதிரம் கொண்ட போர்க்களத்தில் மாய, நாடோறும் அமையானாய், எதிர்நின்று கொன்று நமனுக்கு நல்விருந்தளித்தவன்.

கருவூர் முற்றுகை: இவன் செய்த பல போர்களில் கருவூர் முற்றுகை ஒன்றாகும். இவன் தன் படைகளுடன் கருவூரை முற்றிப் போர் செய்தான். சேர மன்னன் கருவூர் அரணுக்குள் இன்பமாகக் காலம் கழித்து வந்தான். அவன் வீர மானம் அற்றவன். கிள்ளி வளவன் விணே போரிடலைக் கண்டு வருந்திய ஆலத்துார் கிழார் என்ற புலவர் அவனை நோக்கி, “நின் படைகள் செய்யும் கேட்டை நன்கு உணர்ந்தும் சேர மன்னன் மானம் இன்றித் தன் கோட்டைக்குள் இனிதாக இருக்கின்றான். அவன் போருக்கு வரவில்லை. நீ மானமற்ற அவனுடன் பொருவதில் என்ன சிறப்பு உண்டாகும்? நீ வென்றாலும் ஒன்றே அவனைக் கொன்றாலும் ஒன்றே. எச்செயலாலும் நினக்குப் பெருமை வருமென்பது விளங்கவில்லை.”

என்று கூறுமுகத்தால், சேர அரசனது மானமின்மையையும் கிள்ளிவளவனது ஆண்மையையும் விளக்கினார். பின்னர்ச் சேரன் தோற்றான்போலும்! என்னை?

“இமய மலையின்கண் சூட்டப்பட்ட காவலாகிய வில் பொறியையும் சிறந்த வேலைப்பாடமைந்த தேரையும் உடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமை பொருந்திய வலிய தாளை எங்ஙனம் பாடவல்லேன்?”[9] என்று கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளதால என்க.

மலையமானுடன் போர்: மலையமான் என்பவன் திருக்கோவலுரைத் தலைநகரமாகக் கொண்ட மலைநாட்டுத் தலைவன். இந்த மலையமான் மரபினர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சங்க காலம் முதலே சோழர் பேரரசிற்கு உட்பட்டவராவர். அங்ஙனம் இருந்தும், கிள்ளிவளவன் காலத்து மலையமான் எக்காரணம் பற்றியோ சோழனது சீற்றத்திற்கு ஆளானான். அதனால் கிள்ளிவளவன் அவனை என்ன செய்தான் என்பது விளங்கவில்லை; ஆயின் அவன் மக்கள் இருவரையும் சிறைப் பிடித்துக் கொணர்வித்தான்; அவர்களை யானையால் இடறச் செய்யத் தீர்மானித்தான். இஃது அக்காலத்துத் தண்டனை வகைகளில் ஒன்றாக இருந்தது.

இந்தக் கொடுஞ் செயலைக் கோவூர் கிழார் அறிந்தார். அவர் மலையமானது அறச்செயலை நன்கறிந்தவர்; அவ்வள்ளல் மக்கட்கு நேர இருந்த கொடுந்துன்பத்தைப் பொறாதவராய்ச் சோழனைக் குறுகி,

“நீ, ஒரு புறாவின் துன்பம் நீக்கத் தன் உயிர் கொடுத்த சோழன் மரபில் வந்தவன். இப்பிள்ளைகள் புலவர் வறுமையைப் போக்கும் மரபில் வந்தவர்கள். இவர்கள் யானையைக் காணுமுன்வரை அச்சத்தால் அழுதுக் கொண்டிருந்தனர்; யானையைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வியப்பால் அதனை நோக்கி நிற்கின்றனர்; அப்புதிய இடத்தைக் கண்டு அஞ்சி இருக்கின்றனர். நீ இதனைக் கேட்டனையாயின், விரும்புவதைச் செய்வாயாக.”

என்று உறைக்க உரைத்தார். பிறகு நடந்தது தெரியவில்லை.

பாண்டிய நாட்டுப் போர்: கிள்ளிவளவன் பாண்டிய னுடன் போர் செய்தான். போர் மதுரையில் நடந்தது. பாண்டியன் தானைத் தலைவன் பழையன் மாறன் என்பவன். சோழன் வெள்ளம் போன்ற தன் சேனையுடன் போரிட்டான். எனினும், அப்போரில் தோற்றான். அவனுடைய புரவிகளும், களிறுகளும் பாண்டியன் பெற்ற இந்த வெற்றியைக் கண்ட கோக்கோதை மார்பன் (சேரமான் கோக்கோதை மார்பன்?) மகிழ்ச்சி அடைந்தான்.

இந்தச் செய்தியை நக்கீரர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறித்துள்ளார். கிள்ளிவளவன் இப்போரில் வெற்றி பெற்றிருப்பானாயின், அவனைப் பற்றிய 18 பாடல்களில் ஒன்றிலேனும் குறிக்கப் பெற்றிருப்பான். அவனைப் பாடிய புலவர் ஒன்பதின்மருள் ஒருவரேனும் இதனைக் குறியாமை ஒன்றே, அவன் பாண்டிப் போரில் தோற்றிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கிள்ளிவளவன் இறந்த பிறகும் அவனைப் புலவர் நால்வர் பாடியுள்ளனர். அப்பாடல்களிலும் பாண்டிப் போர் குறிக்கப்பட்டிலது. இவற்றை நோக்கக் கிள்ளிவளவன் பாண்டி நாட்டுப் போரில் தோற்றானாதல் வேண்டும் என்பது தெரிகிறது. கரிகாலன் ஏற்படுத்திய சோழப் பேரரசிற்குத் தன்னைப் போல உட்பட்டிருந்த பாண்டியன், அக்கரிகாலன் மரபில் வந்த கிள்ளிவள வனைத் தோற்கடித்துத் தன் ஆட்சி பெற்றதைக் கான (சேரமான்) கோக்கோதை மார்பன் மகிழ்ந்தனன் என்பது இயல்பே அன்றோ?

சேரநாட்டுப் போர்: இத்துடன், இச்சோழன் ‘குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்’ என இறந்தபின் பெயர் பெற்றான். ‘குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்த’ என்பது இதன்பொருள். குளமுற்றம் என்பது சேரநாட்டில் உள்ளதோர் ஊர். இவன் சேரனோடு செய்த போரில் இறந்தானாதல் வேண்டும் என்பது தெரிகிறதன்றோ?

முடிவு: இவன் பல இடங்களிற் போர் செய்தான்; கருவூரை ஆண்ட சேர மன்னனை முதலில் தாக்கினான்; மலையமானைப் பகைத்துக் கொண்டான்' என்ற முற்செய்திகளையும் இவற்றோடு நோக்க, இவனது ஆட்சிக் காலத்தில், கரிகாலன் காலமுதற் சிற்றரசரான அனைவரும் தம்மாட்சி பெற முனைந்தனர் என்பதும், இறுதியில் வெற்றி பெற்றனர் என்பதும் தெளிவாக விளங்குகின்றன.

இவை அனைத்தையும் சீர்தூக்கின், கரிகாலன் உண்டாக்கிய சோழப் பேரரசு கிள்ளிவளவன் காலத்தில் சுருங்கிவிட்டது என்பது நன்கு விளங்குதல் காண்க.

கிள்ளிவளவன் பேரரசன்: தமிழ்நாட்டிற்கு உரியராகிய மூவேந்தருள்ளும் ‘அரசு’ என்பதற்கு உரிய சிறப்புடையது கிள்ளிவளவன் அரசே என்று வெள்ளைக் குடிநாகனார் வெளிப்படுத்துவதிலிருந்து, இவன் அக்காலத்தில் தலைமை பெற்றிருந்த தன்மையை நன்கறியலாம். “செஞ்ஞாயிற்றின் கண் நிலவு வேண்டினும், வேண்டிய பொருளை உண்டாக்கும் வலிமை உடையவன்' என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்தமை அவனது பேரரசுத் தன்மையை அன்றோ புலப்படுத்துவது? மிக்க பெரிய சேனையையுடைய அறிஞர் புகழ்ந்த நல்ல புகழையும் பரந்த சுடரினையும் உடைய ஆதித்தன் வானத்தின் கண் பரந்தாலொத்த தலைமையை உடைய செம்பியர் மரபினன் கிள்ளிவளவன், கொடிகள் அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன் என்று ஐயூர் முடவனார் அருளிச் செய்தமை அறியற்பாலது.

சிறந்த போர் விரன்: இவன் செய்த பல போர்கள் முன்னர்க் குறிக்கப்பட்டுள. பெரும் படைகளைக் கொண்ட இவனே சிறந்த போர்வீரன் என்பதும் புலவர் சொற்களால் அறியலாம். ‘அருஞ்சமம் கடக்கும் ஆற்றலன்’ என்று இவனை எருகாட்டுர்த் தாயங் கண்ணனார் பாடியுள்ளது நோக்கத்தக்கது.

புலவன்-நண்பன்: கிள்ளிவளவன் சிறந்த புலவன் என்பது இவன் பாடிய புறநானூற்றுப் பாடலால் நன்கறியலாம். அங்ஙனமே அப்பாடலால், இவன் பண்ணன் என்பானிடம் கொண்டிருந்த சிறந்த நட்பும் தெரியலாம். அப்பாடலின் பொருள் பின்வருமாறு:

‘பழுத்த மரத்தினிடம் பறவைகள் கூடி ஒசையிடும். அது போலப் பண்ணன் விடுதியில் உண்டியால் உண்டாகிய ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். மழை பெய்யும் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை அடையும் சிற்றெறும்பின் ஒழுங்குப் போலச் சோற்றுத் திரளையைக் கையில் உடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்துடன் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். அங்ஙனம் கேட்டும் கண்டும், எம்பசி வருத்தலால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அண்மையில் உள்ளதோ? சேய்மையில் உள்ளதோ? கூறுங்கள்’ என்று இப்பாணன் கேட்கின்றான். பாணரே, இவன், வறுமையைக் காண்பீராக. என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க இருக்கின்ற பண்ணன், யான் உயிர் வாழ்நாளையும் பெற்று வாழ்வானாக”

இவ்வழகிய பாடலில், கிள்ளிவளவன் தன் புலமையையும் தனது நண்பனாகிய பண்ணனது கொடைத் திறத்தையும் அவன்பால் தான் கொண்டிருந்த சிறந்த நட்பையும் ஒருங்கே விளங்கியிருத்தல் படித்து இன்புறற்பாலது.

புரவலன்: இவனைப் பாடியுள்ள புலவர் ஒன்பதின்மர் ஆவர். அவர் ஆலந்துர் கிழார்’, வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், ஆடுதுறை மாசாத்தனார் ஐயூர் முடவனார், நல் இறையனார், எருக்கூட்டுர்த் தாயங்கண்ணனார் என்போராவார். இவருள் ஆடுதுறை மாசாத்தனாரும் எருக்கூட்டுர்த் தாயங் கண்ணனாரும் இவன் இறந்த பின் வருந்திப் பாடிய செய்யுட்களே புறப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் அவன் உயிரோடிருந்த பொழுது கண்டு பாடிய பாக்கள் கிடைத்தில. இந்த ஒன்பதின்மரையும் இவர்தம் புலமையறிந்து போற்றிப் பாதுகாத்த வளவன் பெருமையை என்னென்பது! சிறந்த கொடையாளியாகிய பண்ணனைத் தன் நண்பனாகப் பெற்றவனும் புலவர் ஒன்பதின்மரைப் பாதுகாத்தவனுமாகிய இக்கிள்ளி வளவன், தன்னளவில் சிறந்த புரவலன் என்பதில் ஐயமுண்டோ? இவன் இத்தன்மையனாக இருந்தமை யாற்றான் புலவர் ஒன்பதின்மர் பாடும் பேற்றைப் பெற்றான், அறவுரை பல அறையப் பெற்றான்; இறந்த பின்னும் புலவர் பாடல்கள் கொண்டான். அவன் இறந்தபின் இவனைப் பாடியவர், மேற்குறித்த ஒன்பதின்மருள் நால்வர் ஆவர். அவர் கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்போராவர்.

இரவலர்க்கு எளியன்: ‘பானனே, நீ கிள்ளிவளவனது கொடிய வாயிலில் காலம் பார்த்து நிற்க வேண்டுவதில்லை; உடனே உள்ளே போகலாம்’ என்று ஆலத்துார் கிழார் பாணனை ஆற்றுப்படுத்தலைக் காண, சோழனது இரவலர்க்கு எளியனாந்தன்மை இற்றென இனிது விளங்குகிறதன்றோ? ‘கலிங்கமும் (ஆடையும்) செல்வமும் கேடின்றி (குறைவின்றி)க் கொடுப்பாயாக; பெரும, நின் நல்லிசை நினைந்து இங்கு வந்தேன்; நின் பீடுகெழு நோன்றாள் பலவாறு பாடுவேன்” என்ற நல் இறையனார் பாடலில், இவனது நல்லிசை அவரை வருமாறு செய்தது என்பதை நோக்குக. இதனால், இவனது வள்ளற்றன்மையும் இரவலர்க்கு எளியனாத் தன்மையும் நன்கு விளங்குகின்றன. இவன் வந்த புலவர்க்கு,

“நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலம் நிறைந்த மணனாறு தேறல்
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரியன்ன வண்மையிற் சொரிந்து
வேனில் அன்னஎன் வெப்பு நீங்க
அருங்கலம் நல்கி யோனே”

என்பது எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் பாடலால் இனிதுணரக் கிடத்தல் காண்க.

புலவர் கையறு நிலை: இப்பெருமகன் அரசனாக இருந்து, பல போர்கள் புரிந்து, புலவர் பலரைப் போற்றி, எளியர் பலரை ஆதரித்து, முத்தமிழை ஒம்பி வளர்த்தமை உன்னி உன்னி, இவன் இறந்தபொழுது புலவர் பாடிய பாக்கள் உள்ளத்தை உருக்குவனவாகும்.

“நமன் வெகுண்டு சோழன் உயிரைக் கொண்டிருத்தல் இயலாது; அவன் பாடுவாரைப் போல நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டானாதல் வேண்டும்” என்றார் நப்பசலையார். “அறிவற்ற நமனே, நாளும் பலரைப் போரிற்கொன்று நினக்கு நல் விருந்தளித்த புரவலனையே அழைத்துக் கொண்ட உன் செயல் விதையையே குற்றி உண்டார் மூடச் செயலை ஒத்ததாகும். இனி, தினக்கு நாளும் உணவு தருவார் யாவர்?” என்றனர் ஆடுதுறை மாசாத்தனார். “பேரரசனாகிய கிள்ளிவளவனைப் புதைக்கும் தாழியை, வேட்கோவே, என்ன அளவுகொண்டு செய்யப் போகிறாய்? அவன் மிகப் பெரியவனாயிற்றே” என வருந்தினர் ஐயூர் முடவனார்.

“குணதிசை நின்று குடமுதற் செலினும்
குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க எள்ளியாம்!
வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே!”

என்று கையற்றுப் புலம்பினார் கோவூர்க்கிழார்.

பாக்களால் அறியத்தகுவன: சோழவளநாடு வேள்விகள் மலிந்த நாடு. அக்காலத்தே அறநூல் ஒன்று தமிழகத்தே இருந்தது. அதனைப் புலவர் நன்கறிந்திருந்தனர். உறையூர் சோழர் கோநகரம் ஆதலின், அங்கு அறங்கூறவையம் இருந்தது. கோட்டை மதிலைச் சூழ ஆழமான அகழி இருந்தது. அதன்கண் முதலைகள் விடப்பட்டிருந்தன. ஊர் காப்பார் இடையாமத்தில் விளக்கு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிவருவது வழக்கம் வரகரிசியைப் பாலிற் பெய்து அட்டசோற்றுடன் முயற் கறியை உண்டலும் அக்கால வழக்கம். இலக்கண முறைமை நிரம்பிய யாழைப் பாணர் வைத்திருந்தனர். அது தேன்போன்ற இனிய நரம்புத் தொடைகளை உடையது. அரசர் முதலானோர் உடலைத் தாழியிற் கவித்தல் மரபு. நாள்தோறும் அரசனைக் காலையில் துயில் எழுப்பல் பாடகர் தொழிலாகும். பாம்பின் சட்டை போன்ற மெல்லிய ஆடைகள் அக்காலத்தில் தமிழ் நாட்டிற் செய்யப்பட்டன. கிள்ளிவளவன் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்திருந்த சேரன் இமயமலை மீது வில்பொறி பொறித்திருந்தான்? இச்செய்தி நன்கு கவனித்தற்கு உரியது. இச்சேரன் யாவன்? இவன் காலம் யாது? என்பன ஆராய்தற்குரிய செய்திகள். இவை பொய்யான செய்திகளாக இருத்தல் இயலாது. என்னை? சோழனைப் பாராட்டிப் பாடும் புலவர், சேரனைப் பற்றிய பொய்ச் செய்தியைச் சோழன் முன்கூறத் துணியார் ஆதலின் என்க. புறவிற்காகத் துலைபுக்க சோழன், தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்பவர் கிள்ளிவளவன் முன்னோர்; முன்னவன் அருளுடைமைக்கும் பின்னவன் பெரு வீரத்திற்கும் சுட்டப் பெற்றனர்.


கோப்பெருஞ் சோழன்

முன்னுரை: இவன் உறையூரைக் கோநகராகக் கொண்டு சோணாட்டை ஆண்ட அரசன். இவன் நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; சிறந்த தமிழ்ப்புலவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய பெரியோன், பொத்தியார் என்றவரை அவைப் புலவராகக் கொண்டவன்; கண்ணகனார், புல்லாற்றுார் எயிற்றிய னார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பிசிராந்தையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்ற பெருந்தகையாளன்.

பழகா நட்பு: பாண்டிய நாட்டிற் பிசிர் என்பதோர் ஊர் ஆகும். அதனில் ஆந்தையார் என்றொரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சோழனுடைய நல்லியல்புகளைப் பலர் வாயிலாகக் கேட்டு, அவன் மீது பேரன்பு கொண்டார்; தம் பாராட்டலைப் பலர் வாயிலாகச் சோழற்கு அறிவித்து வந்தார். சோழனும் அவரது நட்பையும் புலமையையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அவரை மதித்து வந்தான்.

ஒரு நாள் பிசிராந்தையார் சோழனை நினைந்து அன்னச் சேவலை விளித்துப் பாடிய பாட்டு அவரது நட்பினை நன்கு விளக்குவதாகும்.

“அன்னச் சேவலே! அன்னச் சேவலே! எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையணி செய்யும் திருமுகம் போல் மதியம் விளங்கும் மாலைப் பொழுதில் யாம் செயலற்று வருந்துகின்றோம்; நீதான் குமரிப் பெருந்துறையில் அயிரை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமய மலைக்குச் செல்வையாயின், இடையில் உள்ள சோணாட்டை அடைக உறையூரின் கண் உயர்ந்து தோன்றும் மிாடத்தினிடத்தே நின் பெடையோடு தங்கி, வாயிற் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோவிலிற் புகுக, எம் கோவாகிய கிள்ளி கேட்க, ‘யான் பிசிராந்தையின் அடியுறை எனக் கூறுக, அவன் உடனே நின் பேடை அணி யைத் தன் அணிகலம் தருவன்.”

தந்தையும் மக்களும்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்கள் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டுவந்தனர்(?). அவர்கள் தந்தைக்குக் கீழ்ப்படியவில்லையோ அல்லது தந்தையை வென்று தாமே முழு நாட்டையும் ஆள விழைந்தனரோ அறியோம். கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.

அந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனார் என்ற புலவர் பெருமான் அரசனை நல்வழிப்படுத்த விழைந்தார். அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி,

"பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை? நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய்! ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”

என்று உருக்கமாக உரைத்தார்.

அரசன் வடக்கிருத்தல்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகள் மிக்கவன்; ஆதலின், அவனது கோபம், புலவர் அறிவுரை கேட்டபின், இருந்த இடம் தெரியாது ஒழிந்தது. அவன் தன் அரசைத் தன் மக்களிடம் ஒப்புவித்து, அவரால் தனக்கு நேர்ந்த பழியை நினைத்து நாணி வடக்கிருந்தான். வடக்கிருத்தல் என்பது - யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் ஆற்று இடைக்குறைபோலும் தூயதொரு தனி இடத்து எய்தி, வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர் விடுவதாகும். இங்ஙனம் வடக்கிருந்த சோழன் தான் உணர்ந்த அறநெறிச் சாரத்தைத் தன் நண்பர்க்கு உணர்த்த விரும்பிக் கீழ் வருமாறு கூறினான்:

அறவுரை: “தெளிவற்ற உள்ளம் உடையோர், ‘அறத்தினைச் செய்வோமோ, செய்யாதிருப்போமோ’ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர். யானை வேட்டைக்குச் செல்பவன் யானையையும் எளிதிற் பெறுவன், காடை வேட்டைக்குப் போகுபவன் அது பெறாமல் வெறுங்கையுடன் திரும்பினும் திரும்புவன். அதனால், உயர்ந்தவர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால், அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பர் உலகில் இன்பம் நுகர்தலும் கூடும். இல்லையாயின், மாறிப் பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்; ‘மாறிப் பிறத்தலே இல்லை’ என்று கூறுவர் உளராயின், இமயச் சிகரம் ஓங்கினாற் போன்ற தமது புகழை நிலைநிறுத்தி வசையில்லாத உடம்போடு கூடிநின்று இறப்பது சிறந்ததாகும். அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தலே ஏற்புடைத்து.”

எதிர்கால உணர்ச்சி: இங்ஙனம் சிறந்த அறவுரை புகன்ற அரசர் பெருந்தகை தன் பக்கத்தில் இருந்த சான்றோரைப் பார்த்து, “பாண்டிய நாட்டில் நெடுந்தொலைவில் உள்ள பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார் என்ற எனது உயிர் நண்பன் இப்பொழுது இங்கு வருவன்!” என்றனன். அதுகேட்ட சான்றோர், “பாண்டிய நாட்டிலிருந்து ஆந்தையார் இந்நெடுந்தொலைவு கடந்துவருதல் சாலாது” என்றனர். அதுகேட்ட அரசன் நகைத்து,"நிறைந்த அறிவினை உடையீர், என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் நான் செல்வம் உடைய காலத்து வராதிருப்பினும் வறுமையுற்ற இக்காலத்து வந்தேதீருவன். அவன் இனிய குணங்களை உடையவன் தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது, 'என் பெயர் பேதைமையுடைய சோழன்' என்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமை உடையவன். அவன் மெய்யாக வருவன்; அவனுக்கும் இடம் ஒழியுங்கள்”[6] என்றான்.

பொத்தியார் பாராட்டுரை: இங்ஙனம் அரசன் அறைந்த சிறிது பொழுதிற்குள் பிசிராந்தையார் அங்குத் தோன்றினார்; அரசனைத் தன் மார்போடு தழுவிக் கொண்டு உவகைக் கண்ணிர் பெருக்கினார். இந்த அற்புதத்தைக் கண்ட பொத்தியார் பெருவியப்பெய்தி, “தனக்குரிய சிறப்புகளை யெல்லாம் கைவிட்டு இங்ஙனம் அரசன் வடக்கிருத்தல் என்பது நினைக்கும்பொழுது வியப்பினை உடையதாகும்! வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ! இதுதான் இரங்கத்தக்கது!” என்று கூறி வியப்புற்று வருந்தினார்.

என்றும் இளமை: சோழனைச் சூழ இருந்த சான்றோர் பிசிராந்தையாரை நோக்கி, ‘உனக்கு யாண்டு பல ஆகியும் நரையில்லாதிருக்கக் காரணம் என்னை?’ என்று வியப்போடு கேட்டனர். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், ‘"ஐயன்மீர், பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர்! எமது பாண்டியன் முறை வழுவாது குடிகளைப் பாதுகாக்கின்றான்; எமது ஊரில் அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டு அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டே சான்றோர் பலர் வாழ்கின்றனர்.இந்நான்கு காரணங்களால் யான் நரை இன்றி இருக்கின்றேன்” என்றார். கேட்டோர் வியந்தனர்.

ஆந்தையார் வடக்கிருத்தல்: மெய்யன்புடைய பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார். இதில் வியப்பில்லை அன்றோ? இதனைக் கண்ட கண்ணகனார் என்ற புலவர்.

“பொன்னும் பவளமும் முத்தும் மணியும் நிலம், கடல் முதலியவற்றில் உண்டாவன. இவை ஒன்றுக் கொன்று சேய்மைய ஆயினும், அரிய விலையினுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும்பொழுது அவை ஒரிடத்துத் தோன்றினாற்போல எப்பொழுதும் சான்றோர் பக்கத்தினர் ஆவர்.”

என்ற பொருள்படத்தக்க பைந்தமிழ்ப் பாவால் பாராட்டி மகிழ்ந்தனர்.

பூதனார் பாராட்டு: கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்ற நல்லிசைப் புலவர், சோழர் பெருமான் வடக்கிருத்தலைக் கண்டு, “யாற்று இடைக்குறையுள் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்த உடம்பாகிய முழுத் தசையை வாட்டும் வீரனே, நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கு இருந்தார் பலராவர். யான் பிற்பட வந்தேன். நீ என்னை வெறுப்பை போலும்!” எனக்கூறிவருந்தி நின்றனர்.

பொத்தியார் புலம்பல்: அரசன் வடக்கிருப்பின் அவனுடன் பலர் வடக்கிருந்து உயிர்விடல் பண்டை மரபு. ஆதலின் கோப்பெருஞ் சோழனுடன் புலவர் பலர் வடக்கிருந்து உயிர்விட்டனர். ஆனால் பொத்தியார் ஒருவர் மட்டும் வடக்கிருந்திலர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருவுற்றிருந்தமையால், கோப்பெருஞ் சோழனே அவரைத் தடுத்து, நினக்கு மகன் பிறந்தபின் வருக என்று கூறிவிட்டனன். இதனால் புலவர் தம் நண்பன் சொல்லை மீறாது திரும்பிவிட்டார். அவர் திரும்பிப் போகையில் உறையூரைக் கண்டார். உடனே அவருக்கு அரசன் நினைவுண்டாயிற்று. அப்புலவர் பெருமான்,

“பெருஞ் சோறு படைத்துட்டிப் பல ஆண்டுகள் பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தையுடைய பாகன், அந்த யானை இருந்த கூடத்தில் உள்ள கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மை போல - சிறந்த தேர்வண் கிள்ளியை இழந்த பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து யான் கலங்குகின்றேன்.”

என்று கூறிக் கண்ணிர் உகுத்தார்.

பொத்தியார் பின்னொருகால் கோப்பெருஞ் சோழன் இறந்த இடத்தே நடப்பட்ட நடுகல்லைப் பார்த்து வருந்தி,

“இவன் பாடுநர்க்குக் கொடுத்த பல புகழுடையவன்; கூத்தர்க்குக் கொடுத்த மிக்க அன்பினையும் உடையவன்; அறத்திறன் உடையோர் பாராட்டும் நீதி நூற்படி நடத்தும் செங்கோலை உடையவன்; சான்றோர் புகழ்ந்த திண்ணிய நட்பை உடையவன்; மகளிரிடத்து மென்மையை உடையவன், வலியோரிடத்து மிக்க வலியை உடையவன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடமானவன்; இச்சிறப்புகளை உடையவன் என்பதைக் கருதாது கூற்றம் இவனைக் கொண்டு சென்றது; ஆதலால், நாம் அனைவரும் அக்கூற்றத்தை வைவோமாக, வாரீர், புலவீர், நம் அரசன் நற்புகழ்மாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான்.”

என்று கூறிப் புலம்பினார். அவர் தமக்கு மைந்தன் பிறந்த பிறகு, நடுகல்லான அரசனிடம் வந்து, ‘மகன் பிறந்த பின் வா’ என்று என்னை நீக்கிய உறவில்லாதவனே, எனது நட்பை மறவாத நீ யான் கிடத்திற்குரிய இடத்தைக் காட்டு” எனக்கூறி ஒரிடத்தில் வடக்கிருந்து உயிர் விட்டனர்.

சில செய்திகள்: இக்கோப்பெருஞ் சோழன் புலவர் வாய்மொழி கேட்டு நடந்தவன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முறையே வளர்த்தவன். இவன் நாட்டுக்களமர் மதுவை ஆமை இறைச்சியுடன் உண்பர்; கொழுவிய ஆரல் மீனாகிய இறைச்சியைக் கதுப்பகத்தே அடக்குவர். வரகரிசி சமைத்து, வேளைப் பூவைத் தயிரில் இட்டுச் செய்து புளிங்கறி உண்ணல் பாண்டிநாட்டு இடைநிலத்தார் வழக்கம் என்று கோப்பெருஞ் சோழன் குறிக்கின்றான். இவ்வுணவைச் சிலர் உண்டனர் போலும்! உறந்தையில் இருந்த அறங்கூறவையம் புகழ் வாய்ந்தது என்பது பொத்தியார் வாக்கால் அறியலாம்.


நெடுமுடிக்கிள்ளி
(கி.பி.150-200)

பட்டம் பெற்றமை: சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்தவன் செங்குட்டுவன் எனவும் அவன் காலம் கி.பி.150-200 எனவும் முன் சொன்னது நினைவிருக்கும் அல்லவா? அக்காலத்தில், அவனால் ஆக்கம் பெற்றவனே இந் நெடுமுடிக்கிள்ளி என்பவன்.இவனுடைய தகப்பனும் செங்குட்டுவன் தாயான நற்சோணை என்பவளும் உடன் பிறந்தவராவர். ஆதலின், இவன் செங்குட்டுவற்கு 'மைத்துனச் சோழன்’ எனப்பட்டான். இவன் தந்தையான சோழ மன்னன் இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவனுடன் போரிட்டனர். அதனை உணர்ந்த செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, தன் மைத்துனச் சோழ வேந்தன் ஆக்கினன்.

பல பெயர்கள்: இச்சோழன் வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி எனப் பலவாறு மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளான்.

மனைவியும் மகனும் தம்பியும்: இவன் பாண மரபிற் பிறந்த அரச மகளை மணந்தவன், அவள் பெயர் சீர்த்தி என்பது. பாணர் என்பவர் “மாவலி” மரபினராவர். அவர் வட ஆர்க்காடு கோட்டத்தை ஆண்ட சிற்றரசர். இம்மரபினர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். சீர்த்திக்கு ஒரே மகன் பிறந்து வளர்ந்தான். அவனே உதயகுமரன் என்பவன். நெடுமுடிக் கிள்ளியின் தம்பி இளங்கிள்ளி என்பவன். இவன் சோழப் பேரரசின் வட பகுதியாகிய தொண்டை மண்டலத்தைக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். காரியாற்றுப் போர்: நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பாண்டியன் ஒருவனும் சேரனும் வஞ்சியிலிருந்து படையுடன் புறப்பட்டுச் சென்று சோணாட்டின் வடமேற்குப் பகுதியாகிய காரியாறு என்ற இடத்திற்சோழனைத் தாக்கினார். அந்த இடம் தொண்டை நாட்டது. ஆதலின், இளங்கிள்ளி தன்படையுடன் சென்று கடும்போர் செய்து பகைவரை வென்றான்; பகைவர் குடைகள் முதலியவற்றைக் கைப்பற்றி மீண்டான்.

‘காரியாறு’ எது? : திருவள்ளூரிலிருந்து காளத்திக்குப் போகும் பாதையில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் பாடல் பெற்ற சிவன் கோவில் ஒன்று உண்டு. அஃது உள்ள இடம் ‘இராமகிரி’ எனப்படும். அந்த இடத்தில் உள்ள சிவபெருமான் ‘காரிக்கரை உடைய நாயனார்’ என்று அங்குள்ள கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளார். அக்கோவில் அருகில் நகரி மலையைச் சுற்றிக் காளிங்கியாறு ஒடுகின்றது. அஃது இரண்டு சிற்றாறுகளால் ஆனது: ஒன்று காளிங்கி எனவும், மற்றொன்று காலேறு எனவும் பெயர் பெற்றவை. கால்-கருமை, ஏறு-ஆறு, காரியாறு. எனவே, ‘காலேறு’ என்று தெலுங்கில் கூறப்படுகின்ற யாறே, அப்பர் காலத்திலும் அதற்கு முன்னரும் ‘காரியாறு’ எனத் தமிழ்ப் பெயர் பெற்றதாதல் வேண்டும்.”

அந்த இடத்தின் நிலைமை: சங்க காலத்தில் நெல்லூர் வரை சோழநாடு விரிந்து இருந்தது. வேங்கடத்தைச் சேர்ந்த நிலப்பகுதியைத் திரையன் என்பவன் ஆண்டுவந்தான். அவனது தலைநகரம் பாவித்திரி என்பது. அதுவே இக்காலத்துக் கூடூர்த் தாலுகாவில் உள்ள ‘ரெட்டி பாளையம்’ என்பது. ‘கடல் கொண்ட காகந்தி நாட்டுப் பாவித்திரி’ என்று அங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றன. எனவே, பண்டைக்காலத்தில் தொண்டை மண்டலம் அதுவரை பரவி இருந்ததென்றால் தவறாகாது. அந்தப்பகுதி முழுவதும் மலைப்பகுதியாக உள்ளதாலும் சாதவாகனரது தென்பகுதி அங்கு முடிவதாலும் எல்லைப்புறப் போர்கள் அங்கு நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களால் அந்தப் பகுதி வன்மை குறைந்திருந்ததோ என்னவோ, தெரியவில்லை. அங்குக் சென்று சேர பாண்டியர் சோணாட்டு மண்ணாசையால் தாக்கினர் என்று மணிமேகலை கூறுகிறது.

சேர - பாண்டியர் யாவர்? இங்ஙனம் போரிட்ட சேர பாண்டியர் யாவர்? செங்குட்டுவன் பேரரசனாக இருந்த போதிலும் அவனது சேர நாட்டில் ஞாதியர் பலர் பல பகுதிகளை ஆண்டு வந்தனர்; அங்ஙனமே பாண்டி நாட்டில் சிற்றரசர் சிலர் இருந்திருக்கலாம். இன்றேல், கண்ணகியால் கொல்லப்பட்ட பாண்டியற்குப் பின்வந்த பாண்டியனே இப்போரிற் கலந்தவனாகலாம்.

கிள்ளியும் மணிமேகலையும்: கோவலனுக்கும் மாதவிக் கும் பிறந்த மணிமேகலை பெளத்த மந்திர வலியால் வேற்றுருக் கொண்டு புகார் நகரத்து ஏழைகட்கு உணவு படைத்து வந்ததைக் கேள்வியுற்ற நெடுமுடிக்கிள்ளி அவளை அழைப்பித்து உபசரித்தான்; அவள் வேண்டுகோட்படி சிறைச்சாலையை அழித்துத் துய்மை செய்து அவ்விடத்தைப் பல வகையான நற்செயல்களும் நடத்தற்குரிய இடமாகச் செய்வித்தான்.

மணிமேகலையும் உதயகுமரனும்: அரசனது தவப்புதல்வனான உதயகுமரன் மணிமேகலை மீது காதல் கொண்டு அவளைத் தன் வயப்படுத்தப் பலவாறு முயன்றான். அவள் இவனுக்கஞ்சிக் காயசண்டிகை என்பவளது உருவத்தைப் பூண்டு அன்னதானம் செய்து வந்தாள் தன்னிடம் வந்த உதயகுமரனை அறமொழிகளால் தெருட்டினாள். உண்மை உணராத - காய சண்டிகையின் கணவனாக வித்தியாதரன், தன் மனைவி உதயகுமரனை நேசிப்பதாகத் தவறாக எண்ணினான். ஒர் இரவு மணிமேகலையைத் தேடிவந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான்; பிறகு தன் குற்றத்தை உணர்ந்து வருந்தித் தன் நாடு மீண்டான்.

அரசன் மாணவீரன்: தன் தனிப்புதல்வன் இறந்ததைக் கேட்ட அரசன் அதற்குச் சிறிதும் வருந்தாமல், "இளங்கோனுக்கு யான் செய்ய வேண்டிய தண்டனையை வித்தியாதரன் செய்துவிட்டான்.

மாதவன் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனில் இன்றால்;

‘தன் ஒரு மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற சோழன் மரபில் இங்ஙனம் ஒரு கொடியவன் தோன்றினன்’ என்ற செய்தி சேர, பாண்டியர்க்கு எட்டு முன்னரே அவனை ஈமத்தேற்றி விடுக; அக்கணிகை மகளையும் சிறை செய்க" என்று தன் தானைத் தலைவனான சோழிக ஏனாதிக்குக் கட்டளையிட்டான்.

அரசியும் மணிமேகலையும்: நெடுமுடிக்கிள்ளியின் மனைவியான சீர்த்தி என்ற கோப்பெருந்தேவி மணிமேகலையைச் சிறை நீக்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு அவளுக்குப் பல துன்பங்களைச் செய்தாள். அவள் ஒவ்வொன்றிலும் கட்டுப்படாதிருத்தலைக் கண்டு வெருண்டு. தன் குற்றத்தைப் பொருத்தருளுமாறு வேண்டினாள்; பின் அறவண அடிகள் அறவுரை கேட்டு அரசமாதேவி மணிமேகலையை விட்டாள்.

காஞ்சியில் மணிமேகலை: மணிமேகலை பல இடங்களிற் சுற்றிப் பெளத்த சமயத் தொண்டு செய்து வருகையில், காஞ்சிபுரத்தில் பசிக்கொடுமை தலைவிரித்தாடலைக் கேட்டு அங்குச் சென்றாள். அவளை இளங்கிள்ளி வரவேற்றான்; தான் கட்டியிருந்த புத்தர் கோவிலைக் காட்டினான்; அதற்குத் தென்மேற்கில் ஒரு சோலையில் புத்த பீடிகையை அமைத்து, பொய்கை எடுத்து, தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடற்குரிய கோவிலையும் அங்கு உண்டாக்கி, நாட்பூசை, திருவிழா முதலியன அரசனைக் கொண்டு நடைபெறுமாறு செய்வித்து, அறம் வளர்ப்பாள் ஆயினள்.

அரசனும் பீலிவளையும்: ஒரு நாள் நெடுமுடிக்கிள்ளி பூம்புகார்க் கடற்கரையைச் சார்ந்த புன்னைமரக் சோலையில் பேரழகினளான மங்கை ஒருத்தியைக் கண்டு மயங்கினான்; அவளுடன் ஒரு திங்கள் அச்சோலை யிற்றானே உறைந்து இருந்தான். ஒரு நாள் அவள் திடீரென மறைந்து விட்டாள். அரசன் அவளைப் பல இடங்களிலும் தேடி அலைந்தான்; அவன் ஒருநாள் பெளத்த சாரணன் ஒருவனைக் கண்டு வணங்கி, “என் உயிர் போல்பவளாகிய ஒருத்தி இங்கே ஒளித்தனள், அவளை அடிகள் கண்டதுண்டோ?” என்று கேட்டான். அச்சாரணன், " அரச, அவளை யான் அறிவேன். அவள் நாக நாட்டு அரசனான வளைவணன் மகள் ஆவாள். அவள் பெயர் பீலிவளை என்பது. அவள் சாதகம் குறித்த கணி, ‘இவள் சூரியகுலத்து அரசன் ஒருவனைச் சேர்ந்து கருவுற்று வருவாள்’ என்று தந்தைக்குக் கூறினன். அவளே நீ கூறிய மடந்தை. இனி அவள் வாராள். அவள் பெறும் மகனே வருவான். இந்திர விழாச் செய்யாத நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரத்தைக் கடல் கொள்ளும், இந்திரன் சாபமும் இருத்தலால் அது தப்பாது; ஆதலின், என் கூற்றை நம்பி, இந்நகரைக் கடல் கொள்ளாதபடி இந்திர விழாவை ஆண்டு தோறும் மவாது செய்து வருக” என்று கூறி அகன்றான்.

புகார் அழிவு: புகார் நகரில் கம்பளச் செட்டி என்றொருவன் இருந்தான். அவன் நாகநாடு சென்றிருந்த பொழுது பீலிவளை, தான் பெற்ற மகனை அவனிடம் ஒப்புவித்தாள். அவன் அக்குழந்தையுடன் கப்பலில் வரும் பொழுது, கப்பல் தரை தட்டி உடைந்து விட்டது. வணிகன் உயிர் பிழைத்துப் பூம்புகாரை அடைந்தான். குழந்தை என்ன ஆயிற்று என்பது அவனுக்குத் தெரியாது. வந்த வணிகன் நடந்ததை அரசனுக்கு அறிவித்தான். சோழர் பெருமான் அது கேட்டு ஆற்றொனாத் துயர் அடைந்து, அக்குழந்தையைத் தேடி அலையலானான்; அவனது துன்ப நிலையில் இந்திர விழாவை மறந்தான். உடனே இந்திரன் - மணிமேகலா தெய்வம் இவர் தம் சாபங்களால் பூம்புகாரைக் கடல் கொண்டது இந்த அழிவினால், மாதவி, அறவண அடிகள் முதலியோர் காஞ்சியை அடைந்தனர்.

முடிவு: இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இந் நெடுமுடிக்கிள்ளியைப் பற்றி ஒன்றும் தெரிந்திலது. இவனுக்குப் பிள்ளைப் பேறு இன்மையால், இவனுக்குப் பின் சோழ அரசன் ஆனவன் இன்னவன் என்பது தெரியவில்லை.

கடல் வாணிகம்: மணிமேகலை, சிலப்பதிகாரங்களை நன்கு ஆராயின், கி.பி.2ஆம் நூற்றாண்டில் சோணாடு மேனாடுகளுடன் கிழக்கு நாடுகளுடனும் சிறந்த முறையில் கடல் வாணிகம் நடத்தி வந்தது என்பதை அறியலாம். இதனைப் பற்றிய விளக்கம் அந்நூல்களிலும் பரக்கக் காணலாம். இவற்றோடு, அவ்விரு நூற்றாண்டுகளிலும் இந்நாடு போந்த மேனாட்டுச் செலவினர் (யாத்ரிகர்) எழுதியுள்ள குறிப்புகளும் நோக்கத் தக்கனவாகும்.

பெரிப்ளூஸ்-பிளைநி-தாலமி: கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் இந்தியா - சிறப்பாகத் தமிழகம் மேல் நாடுகளுடன் வாணிகம் நடத்தி வந்ததை அவ்வக்கால மேனாட்டு ஆசிரியன்மர் குறிப்பிட்டுள்ளனர்.[13] கி.பி. முதல் நூற்றாண்டின் கடைப் பகுதியில் (கி.பி. 70-100) இருந்த அலெக்ஸாண்டிரிய வணிகர் ஒருவர் குறித்த பெரிப்ளுஸ் என்னும் நூலில் தமிழ் நாட்டுத் துறைமுகப்பட்டினங்கள், தமிழ்நாட்டுப் பிரிவுகள், ஏற்றுமதிப் பொருள்கள், இறக்குமதிப் பொருள்கள் முதலியன குறிக்கப்பட் டுள்ளன. அக்காலத்தில் சோழ நாடு இரண்டு மரபினரால் ஆளப்பட்டு வந்தது. ஒரு பகுதி புகாரைத் தலைநகராகக் கொண்டது; மற்றது உறையூரைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதி. இக்கூற்று உண்மை என்பதை ‘உறையூர்ச் சோழர்’, ‘புகார்ச் சோழர்’ என வரும் சங்க காலப் பாக்களில் வரும் செய்திகளைக் கொண்டு நன்கறியலாம். காவிரிப்பூம்பட்டினம் எனப் பட்ட புகார் நகரம் குறிக்கப்பட்டுள்ளது. உறையூர் குறிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. ஏறக்குறையக் கி.பி.80இல் பிளைநி என்பார் குறித்துள்ள குறிப்புகளுள் சில சோழநாட்டைக் குறிக்கின்றன. அவர் குறித்துள்ள பல பொருள்கள் புகாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவாகக் காண்கின்றன.

புகார் நகரம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டும் சோழர் துறைமுகங்களாக இருந்தன என்று கி.பி.140-இல் வாழ்ந்த தாலமி என்பார் குறித்துளர்; உறையூரையும் குறித்துளர்; ஆர்க்காடு குறிக்கப்பட்டுளது; அவ்விடத்தே நிலைத்து வாழாத குடிகள் இருந்தனர் என்று தாலமி கூறியுள்ளார்.


 பிற சோழ அரசர்

முன்னுரை: புறநானூற்றுப் பாடல்களில் சோழ மரபினர் பலர் குறிக்கப் பெற்றுளர். அவர்களைப் பற்றி ஒன்று முதல் நான்கு, ஐந்து பாடல்கள் அந்நூலுட் காண்கின்றன. சிலர் பேரரசராகவும் பலர் சிற்றரசராகவும் இருந்திருத்தல் கூடியதே ஆகும். இவர் தம் குறிப்புகள் அனைத்தும் இப்பகுதியிற் காண்க. 

1. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

முன்னுரை: இவன் பெயரைக்கான, இவன் பேரரசனாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இராயசூய வேள்வி செய்பவன் பேரரசனாக இருத்தல் வேண்டும். எனவே, இவன் பல நாடுகளை வென்று அடக்கியவனாதல் வேண்டும் என்பதுதானே போதரும், புறம் 16-ஆம் செய்யுள் இவனது போர்த் திறத்தைப் பாராட்டியுள்ளது. அதனைப் பாடியவர் பாண்டரங்கண்ணனார் என்பவர். இவனைப் பற்றிய பாடல்கள் கிடைக்காமை வருந்தற்குரியதே.

போர்ச் செயல்கள்: “இவன் எல்லை இல்லாத படையினையும் துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் உடையவன்; புலால் நாறும் வாளினையும் பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன்; பகைவரது நெல்விளை கழனியைக் கொள்ளையூட்டி காவற் பொய்கைகளிற் களிறுகளைப் படிவித்து நாடு முழுவதும் செந்நிறமாகச் செய்த பெருவீரன். இவன் எண்ணப்படியே இவனுடைய களிறுகள் போர் செய்ய வல்லன.” இங்ஙனம் இவன் போர் செய்த இடங்கள் எவை என்பது விளங்கவில்லை.

சேரனுடன் போர்: இப்பேரரசன் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவனுடன் போர் செய்தவன். அப்போரில் இவனுக்கு உதவி செய்தவன் திருக்கோவிலுரை ஆண்ட மலையமான் ஆவன். அவனைப் பாட்டி வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் பாடியுள்ளார்; “மலையன் இல்லாவிடில் நாம் வெல்லுதல் அரிதென்று சோழனும் நின்னைப் புகழ்கின்றான்; மலையன் இல்லாவிடில் நாம் தோற்பதரிது’ என்றுசேரனும் நின்னைப் பாராட்டுகின்றான். வள்ளன்மையிற் சிறந்த பெரியோனே, நண்பரும் பகைவரும் பாராட்டத்தக்க நினது வீரம் புகழ்தற்குரியதே ஆகும்”

சேர பாண்டியர்க்கு நண்பன்: இப்பெருநற்கிள்ளி தன் காலத்துச் சேர பாண்டிய மன்னர்க்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இவன் காலத்துச் சேரப் பேரரசன் மாரி வெண்கோ என்பவன்; பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்பவன். இவ்விருவரும் சோழனுடன் சில நாள் அளவளாவித் தங்கி இருந்தனர். அவ்வமயம் ஒளவையார் இம்மூவரையும் பாராட்டிப் பாடியுள்ளார்;

“தேவலோகத்தை ஒத்த சிறப்புடைய நாடாயினும் அது நம்முடன் வருதல் இல்லை; அது தவஞ் செய்தோர்க்கே உரியதாகும்; என்றும், இரந்த பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பல ஊர்களைத் தானமளித்தீர்; பசிய இழைகளை அணிந்த மகளிர் பொற்கிண்ணங்களில் ஏந்திய தேனை உண்டு மகிழ்ந்தீர், இரவலர்க்குப் பல நகைகளை அளித்தீர்; இநத நல்வினையே நும்மை வாழச் செய்யும். நீவிர் மூவரும் விண்மீன்களிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்வீராக!

சிறந்த வள்ளல்: இவனது வள்ளன்மையை உலோச்சனார் என்ற புலவர் அழகாக விளக்கியுள்ளார்: “மலை பயந்த மணியும் காடு பயந்த பொன்னும் கடல் பயந்த கதிர் முத்தமும் வேறுபட்ட உடையும் மதுக்குடமும் கனவிற் கண்டாற் போல (மிகுதியாக) வழங்குகின்ற வள்ளலே, நின் கொற்றம் வாழ்வதாக!”

புரவலன்: இப்பெருந்தகை ஒளவையார், பாண்டரங் கண்ணனார், உலோச்சனார் என்ற பைந்தமிழ்ப் புலவரை ஆதரித்தவன் என்பது இப்பாக்களால் நன்கு தெரிகிறது. இவன் வரையாது வழங்கிய பெருவள்ளல் என்பதும், பார்ப்பார்க்குப் பிரம்மதேயங்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் என்பதும், அவர்கள் துணைகொண்டு இராயசூயம் செய்து புகழ்பெற்றவன் என்பதும் விளங்குகின்றன.

2. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி

முன்னுரை: இவன் தித்தன் என்ற சோழனது மகன்; தந்தையுடன் வேறுபட்டு நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக் கூழை உண்டிருந்தவன், முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றவன் இவனைப் பாடியவர் சாத்தந்தையார் (சாத்தன் தந்தையார்?) பெருங்கோழி நாய்கன் மகள் தக்கண்ணையார் என்போராவர்.

போர்: இவனது ஊரைக் கொள்ள ஆவூர் மல்லன் வந்தனன் போலும்! அவனுடன் இவன் விரைந்து போர் செய்தான். அப்போர் பொழுது போன பிறகு கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கண்ணையார் காதல்: இவர் புலவர் பெண்மணி ஆவர்; பெருங்கோழி (உறையூர்?) நாய்கன் மகளாவர். இவர் கிள்ளிமீது காதல் கொண்டவர்போலப் பாராட்டும் பாக்கள் நயமுடையன;

"வீரக் கழலையும் மைபோன்ற மீசையையும் உடைய இளையோன் பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுகிறது. அவனைத் தழுவ உள்ளம் உந்துகிறது. ஆயின், யாய்க்கும் அவையோர்க்கும் அஞ்சுகிறேன். என் சோழன் உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையைப் போல பகைவர்க்குக் காணப்படுவன். அவன் போரிற் சிறந்தவன். என் தலைவன் சிறந்த வெற்றி கண்டவன் என்று எல்லாரும் புகழ்தலைக் கேட்டு யான் மகிழ்கின்றேன். என் உள்ளம் கவர்ந்த ஆண்மையுடைய வளவன் வாழ்வானாக!”

3. வேல்பல் தடக்கைப் பெருநற்கிள்ளி

முன்னுரை: இவன் கழாத் தலையார், பரணர் என்பவ ரால் பாடப்பெற்றவன்; குடக்கோ நெடுஞ் சேரலாத னுடன் போர் செய்து இறந்தவன். இரண்டு அரசரும் போர்க்களத்தில் இறந்தமை கண்டு கழாத் தலையாரும் பாணரும் பாடி வருந்தினர். அப்பாடல்களாற் சில செய்திகள் அறியக் கிடக்கின்றன. அவையாவன:

பாடற் செய்திகள்: படைவீரர் பதினெண்பாடை மாக்கள் ஆவர். இறந்த அரசருடன் அவர் தம் மனைவியர் உடன்கட்டை ஏறினர். தேவர்கள் நாற்றமாகிய உணவைப் (போரில் பலர் இறந்தமையின்) பெற்றனர். யானை குதிரை யாவும் களத்தில் இறந்தன; கரிவீரர் அனைவரும் மாண்டனர்; தேரைச் செலுத்தினவர் எல்லாரும் இறந்தனர். மயிர் சீவாது போர்த்தப்பட்ட கண்ணையுடைய முரசங்கள் அடிப்பாரின்றிக் கிடந்தன. கழனிக் கண் ஆம்பல் தண்டால் செய்த வளையலைப் பெண்கள் அணிதல் மரபு.

4. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி

இவனைப்பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் பாடிய பாட்டு ஒன்றே கிடைத்துள்ளது. இவன் ஒருநாள் தன் யானை இவர்ந்து செல்கையில், அது மதங் கொண்டு கருவூர்ப் பக்கம் விரைந்து சென்றது. அவனைக் கண்டு கருவூரை ஆண்ட சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை என்பவன் தன்னுடன் இருந்து முடமோசியார் என்ற புலவரை, ‘இவன் யாவன்?’ எனக்கேட்டான். அப்போது புலவர் இவனது சிறப்பையும் யானை மதங்கொண்டு வழி கடந்து போதலையும் விளங்க உரைத்தார். இவன் வரலாறு தெரிந்திலது.

5. தித்தன்

சிறப்பு: இவன் உறையூரில் இருந்து அரசாண்ட பழைய வேந்தன். இவன் மகனே முன் கூறப்பெற்ற போர்வைக் கோப் பெருநற்கிள்ளி என்பவன். இத்தித்தன் பெருங்கொடையாளி என்பது,

“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉ மாவண் தித்தன்

என்னும் பரணர் அடிகளால் விளங்குதல் காணலாம். இவன் மகள் ஐயை என்ற கற்புடைப் பெண் ஆவள்.

உறையூர்: இவன் உறையூரைச் சிறந்த மதில் அரனும் காட்டரணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புரந்த காவலன் என்பது பரணர், நக்கீரர் இவர்தம் பாடல்களால் அறியக் கிடக்கிறது.

போரில் பகைவன் ஒட்டம்: வடுக வேந்தனாகிய கட்டி என்பவன் இத் தித்தனுடன் போர் செய்ய வந்தான். அவனுக்கு உதவியாகப் பாண அரசன்  ஒருவனும் வந்து உறையூரை முற்றுகை இட்டான். ஒருநாள் சோழன் அவைக்களத்தில் ஒலித்த கிளை ஒசை கேட்டு அச்சமுற்று இருவேந்தரும் ஒடிவிட்டனராம். இது,

“வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்

பாடின் றெண்கிளைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே”

என அகப்பாட்டிற் கூறப்பட்டுள்ளது.

சிறந்த புலவன்: இத்தித்தன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருக்கிறது. அஃது இனிமை மிக்க பாடலாகும்.

6. சோழன் நல் உருத்திரன்

புலவன்: இவனது வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவன் பாடிய ஒர் அழகிய புறப்பாட்டே இன்று இருப்பது. அதைக் காணின், இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பம் உடையவன் என்பதும் செய்யுள் செய்தலில் வல்லவன் என்பதும் தெரிகின்றன. அச்செய்யுளின் பொருள் இதுவாகும்:

“தான் பெற்ற சிறிய கதிரைத் தன் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி இல்லாதாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய ஆண்பன்றி இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின், அதனை உண்ணுதல் இழிவென்று கருதி அன்று அதனை உண்ணாதிருந்து, அடுத்த நாள் மலைக்குகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச் செய்து உண்ணும் புலி பசித்தாற்போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாள்கள் உளவாகுக”

முல்லைக்கலி: இச்சோழ மன்னன் முல்லைக்கலி பாடிய பெரும் புலவன் ஆவன். எனின், இவனது புலமைச் சிறப்பை யாரால் அளவிட்டுரைக்கலாகும்?


சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்

சங்ககால நிலைமை: தொல்காப்பியம், வடமொழியாளர் தமிழகத்தில் வேரூன்றிவிட்டதை நன்கு அறிவிக்கிறது; அவர் தம் பழக்க வழக்கங்களையும் ஒரளவு தெரிவிக்கிறது. அக்கால முதல் சங்கத்து இறுதிக் காலமாகிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டுவரை சிலப்பதிகார காலம் வரையுள்ள தமிழ்ப்பாக்களைக் கானின், வடமொழியாளருடைய வேதவேள்விகள், சமயக் கோட்பாடுகள் இன்னபிறவும் படிப்படியாகத் தமிழர் வாழ்க்கையில் கலந்து வந்த நிலைமையை நன்கு உணரலாம். எனினும், இந்தப் புதுமை நகர மக்களிடமே காணப்பட்டதாகும். திணை மக்களாக இருந்தவரிடம் இவை வேரூன்றில, இஃது எங்ஙனமாயினும், தமிழ் அரசர் தம்மைக் கதிரவன்வழி வந்தவர் என்றும், மதிவழி வந்தவர் என்றும் வடநாட்டு அரசரைப் போலக் கூறத் தலைப்பட்டு விட்டனர்; வேத வேள்விகளில் விருப்புக் கொண்டனர், வேதங்களில் வல்லாரைத் தமக்கும் புரோகிதராகக் கொள்ளத் தலைப்பட்டனர் என்பன நன்கு விளங்குகின்றன. வடவர் கூட்டுறவால் பழந்தமிழர் மணவாழ்க்கை, பிற சடங்குகள், சமயக் கொள்கை முதலியவற்றுள் வடவர்கொள்கைகள் சிறிது சிறிதாகப் புகத் தொடங்கின என்பதும் நன்கு அறியக் கிடக்கிறது. எனினும், கூர்த்தஅறிவு கொண்டுகாணின், ‘பழந்தமிழர் நாகரிகம் இது’ என்பதைச் சங்க நூற்களைக் கொண்டு எளிதில் உணரலாம். இதனை உணர விரும்பாதாரும் உணர அறிவற்றாருமே, ‘இரண்டையும் பிரித்துணரல் இயலாது’ என்பர்.

நாடு: சோழநாடு என்பது தஞ்சை, திருச்சிக் கோட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பாகும். வடக்கும் தெற்கும் வெள்ளாறுகள்; கிழக்கே கடல், மேற்கே கோட்டைக் கரை இதற்கு எல்லைகள் ஆகும். ‘கோட்டைக் கரை’ என்பது ஆற்றங்கரை மீதமைந்த கோட்டை, அஃதாவது ஆற்றங்கரையை மிகவுயர்த்திக் கோட்டை போலக்கட்டப்பெற்ற அரண் அமைப்பாகும். இஃது திருச்சிக் கோட்டத்தில் உள்ள குழித்தலை நாட்டில் உள்ளது. கோட்டையின் சிதைவுகள் இன்றும் காணக்கிடக்கின்றன. இந்நாடு தட்டையான சமவெளி மலைகள் அற்றது; காவிரியாறு தன் பல கிளையாறுகளுடன் பரந்து பாயும் செழுமையுடையது. இச்சமவெளி மேற்கே சிறிது உயர்ந்தும் கிழக்கே சிறிது தாழ்ந்தும் இருக்கின்றது. காவிரி கடலருகில் பல கிளைகளாகப் பிரிந்து கடலை அடைகின்றது. அந்த இடத்தில் காவிரியால் தேக்கப்படும் வண்டல், நாட்டைச் செழுமைப்படுத்துகிறது. காவிரியும் அதன் கிளைகளும் கடலோடு கலக்கும் இடம் நீண்ட சமவெளியாகும். அந்த இடம், பார்க்கத்தக்க பண்புடையது. சோழநாட்டில் நெல்வயல்கள் மிக்குள்ளன. மாமரங்கள்,தென்னைமரங்கள், பழமரங்கள் என்பன நன்றாக செழித்து வளருகின்றன. சோணாட்டில் காடுகளே இல்லை. ‘யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் விளையும் பயிர் எழுவரை உண்பிக்கும் வளமுடைய சோணாடு என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்துளர். ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததென்று பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் கூறியுள்ளார்.

நாட்டின் பிரிவுகள்: சங்க நாளில் நாட்டின் பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர்களாகும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக் குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையில் உள்ள நகராகும்.

காவிரியாறு: காவிரியாறே சோணாட்டின் செழுமைக்குக் காரணமானது. ஆதலின் அதனைப்பற்றிப் பிற்காலத்தே பல கதைகள் எழுந்தன. அவற்றை மணிமேகலையிற் காண்க. காவிரி, ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ என்று சிவஞானமுனிவரும் பாராட்டத்தக்க சிறப்புடையது. அது பொன்னைக் கொழித்தலாற் பொன்னி எனவும், சோலைகளைத் தன் இருபுறங்களிலும் விரிந்திருக்கப் பெற்றமையின் காவிரி எனவும் பெயர் பெற்றன.இதன் சிறப்பை நன்குணர்ந்தே கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் “வருநா ளென்றும் பிழையாத் தெய்வப் பொன்னி” என்றார். இங்ஙனம் பிற்காலப் புலவரும் போற்றுந்தகைமை உடையதாய அக்காவிரி, சோணாட்டுக் குடிகட்குச் செவிலித்தாயாக அமைந்ததில் வியப்பில்லை அன்றோ? ஆண்டுதோறும் புது நீர்ப் பெருக்கம் வரும்பொழுது பதினெட்டுப் படிகளும் நீரில் மறையுமாம். அந்த நாளே ‘பதினெட்டாம் பெருக்கம்’ என்று பண்டையோர் காவிரியாற்றுக்கு வணக்கம் செய்து  வந்தனர். இக்காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடப்பெற்ற காவிரிப்பாக்களைச் சிலப்பதிகாரத்திற் கண்டு மகிழ்க.

நகரங்கள்: பண்டைச் சோழநாட்டின் துறைமுகப் பட்டினமாக இருந்த பெருமை பெற்றது காவிரிப்பூம் பட்டினம். அந்த இடம் மணிமேகலை காலத்திற் கடல் கொண்டது. அந்த இடத்தை உணர்த்த இன்று காவிரிப் பட்டினம் என்ற பெயருடன் அங்கு ஒரு சிற்றுார் இருக்கிறது. அந்த இடத்திற் கிடைத்த கல்வெட்டுகள் அங்குதான் புகார் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. தவிர, நாகப்பட்டினமும் சிறந்த துறைமுக நகரமாகும். இன்று சிற்றுாராகக் கிடக்கும் உறையூர் பண்டைச் சோழர் கோ நகரங்களில் ஒன்றாகும். குடந்தை அல்லது கும்பகோணம் சோணாட்டுப் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிற்றுார்கள்: சோழ நாட்டில் எண்ணிறந்த சிற்றுார்கள் இருந்தன. பொய்யாதளிக்கும் பொன்னியாற்று வளத்தால் சிற்றுார்கள் நெற்களஞ்சியங்களாக விளங்கின. வயல்களில் அல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. அவை கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் முயற்சியில் எழுந்த புகையால் வாட்டமுற்றன. எருமை மறையத் தக்க செஞ்சாலிப் பயிர்கள் வயலை அழகு செய்தன. சிற்றுரைச் சுற்றிலும் மா, பலா, வாழை, தென்னை, கமுகு மரங்கள் செழித்து வளர்ந்தன; நிறைந்த பயனைத் தந்தன. அறுவடைக்கு முன் கண்ணைக் கவரத் தக்க அணிகலன்களை அணிந்த மகளிர் வயல்களைக் காவல் புரிந்தனர். நென் மணிகளைத் தின்ன வந்த பறவைகளைத் துரத்தத் தம் அணிகளை வீசி எறிந்தனர். சிறிய பிள்ளைகள் கால்களில் தண்டை ஒசையிட விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

சோழர் முதலிய பெயர்கள்: சோழர் என்னும் சொல்லுக்குப் பொருள் காண முயன்றோர் பலர், பொருள் காண, முடியாத சொற்களில் ‘சோழ’ ஒன்றாகும் (நீர்) ‘சூழ்நாடு’ என்பது நாளடைவில் ‘சூழநாடு, சோழ நாடு என மாறியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. உலக்கை - ஒலக்கையாக மாறி வழங்கல் போல ‘சூ’ - ‘சோ’வாக மாறல், இயல்பே அன்றோ? இஃது ஆராய்ச்சிக்குரியது. சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன், செம்பியன் என்பன சிறந்தவை. ‘கிள், தோண்டு, வெட்டு’ என்னும் பல பொருள்களைக் குறித்து, ‘நிலத்தைத் தோண்டிவளம் செய்பவன்’ என்னும்பொருளில் வந்திருக்கலாம். வளமுடைய நாட்டான் வளவன் எனப்பட்டான். ‘சிபி’ மன்னன் மரபினர் செம்பியன் (சிபியன், செபியன், செம்பியன்?) எனப்பட்டார். சென்னி என்பதும் சோழர் பெற்ற பெயராகும்.சென்னி-தலை;“சிறப்புடையது” என்னும் பொருள் கொண்டு, சென்னி நாட்டிற் சிறந்தவன், அரசன் என்னும் பொருள்களில் வழங்கப் பெற்றதுபோலும்!

அரசன் இலச்சினை: வழிவழியாகச் சோழர்க்கு உரியது புலி இலச்சினை. சோழர் புலிக்கொடி உடையவர். காடே இல்லாத சோழ நாட்டில் புலி ஏது? மிகப் பழைய காலத்தில் இருந்த நாட்டில் வேந்தன் எவனேனும் முதன் முதல் புலியைக் கொன்ற பெருஞ் செயலை மதித்து, அதனைச் சிறப்புக் குறியாகக் கொண்டிருக்கலாம்; பின்னவர் அதனையே தமது மரபு இலச்சினையாகக் கொண்டனர் போலும்! இக்குறியைப் பற்றிய விளக்கம் சங்க நூற்களில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் தெலுங்க நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையைப் பெற்றிருந்தனர்.

அரசு :சோழநாடு பண்டைக்காலத்தில், முன் சொன்னவாறு, பல சிறு பிரிவுகளாக இருந்தது. பிறகு கரிகாலன் போன்ற வீரமன்னர் காலத்தில் ஒர் அரசனிடமே அமைந்திருந்தது. அரசு தந்தைக்குப்பின் மகன் அடைவதென்ற முறையிலேயே நடைபெற்று வந்தது. சில சந்தர்ப்பங்களில் பட்டம் பெறும் இளைஞன் வலியற்றவனாயின், தாயத்தார் அவனைத் துரத்திப் பட்டத்தைப் பெறுதலும் உண்டு. ‘அரசனும் குடிகளும் ஒன்று பட்டுள்ள நாடே நாடு’ என்னும் திருக்குறள் கருத்திற்றான் பண்டை அரசு ஏறத்தாழ நடந்து வந்தது. அரசுக்கு நிலவரி, சுங்கவரி, வென்ற நாட்டுச் செல்வம் என்பனவே செல்வமாக அமைந்திருந்தன. சோழர் கும்பகோணத்தில் அரசு பண்டாரத்தை வைத்திருந்தனர்; அது மிக்க காவலைக் கொண்டிருந்தது.

குழு-ஆயம்-மன்றம்: அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும் இருந்தன. அமைச்சர், புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், சாரணர் என்போர் கொண்ட அவை ஐம்பெருங்குழு எனப்படும். கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் கொண்ட அவை எண்பேராயம் எனப் பெயர் பெறும். இவையன்றி மன்றம் என்பது ஒன்றுண்டு. அங்கு அவை கூடும் என்று திருக்குறளும் பிற நூல்களும் பலபடியாகக் கூறுவதிலிருந்து, ஊரவை அரசியலிற் பங்கு கொண்டதே என்று கருதுதல் தவறாகாது. உறையூர் மன்றத்தில் மலையமான் மக்கள் விசாரிக்கப்பட்டனர் என்பதிலிருந்து, ஊர் மன்றம் என்பது நீதிமன்றப் பணியிலும் ஈடுபட்டிருந்தமை தெளிவாதல் காண்க.‘உறையூர் அரசனான கோப்பெருஞ் சோழன் இறந்தபின், அவன் இருந்த மன்றத்தைப் பார்த்துக் கலங்கினேன்’ என்று பொத்தியார்  வருந்திக் கூறலை நோக்க, அரசன் மன்றத்தில் இருந்து அரசியல் செய்த அழகு தெரிகிறதன்றோ? அறிஞர் ஊர் அவையை அடையும் பொழுது, தங்கள் பகைமையையும் பூசலையும் மறந்து, பொதுப்பணி செய்வதற்கு உரிய உள்ளத்தோடு இருப்பர் என்று பொருள்படத்தக்கவாறு பொருநர் ஆற்றுப்படை வரிகள் இருத்தல் காண்க. அரசன், ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஊர் அவை இம்மூன்று குழுவினரையும் கலந்தே அரசியல் நடத்தி வந்தான் எனக் கோடலில் தவறில்லை. இத்தகைய அரசியல் அவை, கற்றார் அவைகளைப் பற்றியே வள்ளுவனார் வற்புறுத்திப் பாடியுள்ளார் என்பது ஈண்டு அறியத்தக்கது. ஊர்தோறும் தீயோர் தீமைகண்டு ஒறுப்பதற்குரிய வீறுசால் அவைகள் பண்டைத் தமிழகத்திலிருந்து முறை செய்தன.

ஊர் மன்றம்: சிற்றுார்களிலும் சங்க காலத்தில் மன்றம் இருந்தது. ஊரின் பொதுச் செயல்களை ஆய்ந்து முடிபு கூற ஊரார் கூடிய இடமே மன்றம் எனப்பட்டது. அக்கூட்டம் பெரிய மரநிழலிற் கூடும்.அப்பொது இடத்தில் ஊரைப்பற்றிய செயல்களுடன், கூத்து முதலியனவும் நடைபெறல் வழக்கம். பெண்கள் நடிப்பர்.இவ்வூரவைச்செயல்கள் போர்க்காலத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. இவ்வூர் அவைகள் இன்னின்ன செயல்களைச் செய்தன என்று திட்டமாக அதற்கு உரிய விவரங்கள் இன்று கிடைக்கவில்லை. ஆயினும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர் பட்டயங்களில் இவ்வூரவைகள் இருந்தன என்பது குறிக்கப்பட்டிருத்தலால், இவை பெரும்பாலும் ஊராண்மை நடத்தி வந்தன என்று கோடல் தவறாகாது. ஊரவையார் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் இங்கு அறியத்தகும்.

வரிவிதிப்பு: நிலவரி, தொழில் வளி, சுங்க வரி என்பன வழக்கில் இருந்தன. நிலவரியே பெரிய வரியாகும். நிலக்கிழவனே அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்பட்டான். இதனால் அன்றோ வள்ளுவனார்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என அழுத்தமாக அறைந்தார்? வெளிநாட்டு வாணிகம் சங்க காலத்திற் சிறந்திருந்தது. சுங்கச் சாலைகள் மிக்கிருந்தன. இவைபற்றிய விளக்கம் பட்டினப் பாலையிற் பரக்கக் காணலாம். “கடலுக்கு எதிரேயுள்ள அகன்ற சாலையில், உழைப்பிற் சிறந்த அரசியல் அலுவலாளர் அரசனுடைய பண்டங்களைக் கருத்தோடு பாதுகாக்கின்றனர்; நாள்தோறும் சுங்கம் வசூலிக்கின்றனர்; கதிரவன் குதிரைகளைப் போலச் சலிப்பின்றி உழைக்கின்றனர்; நாள் தோறும் அளவற்ற பண்டங்கள் கடலிலிருந்து கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன; கரையிலிருந்து ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு பண்டப் பொதி மீதும் புவி இலச்சினை பொறிக்கப்படும். பண்டங்கள் பண்டசாலைகளில் அடைக்கப்படும்” இக்கூற்றால் அரசியலுக்கு வந்த வரிகளுள் சுங்கவருமானம் ஒன்றாகும் என்பது தெளிவாதல் காண்க. நில அளவைகளில் வேலி, மா என்பன இருந்தன என்பது தெரிகிறது. இதனால், பிற அளவைகள் இல்லை எனல் கருத்தன்று.

சிறைச்சாலை: மணிமேகலை புகாரில் சிறை வைக்கப்பட்டாள். அவள் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கினாள். பண்டைக்காலத்தில் சிறைச்சாலை ‘சிறைக்கோட்டம்’ என்று பெயர் பெற்று இருந்தது போலும்!

படை : சோழ மன்னரிடம் பண்பட்ட படைவீரர் இருந்தனர். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை இருந்தன. தானைத் தலைவர் எண்பேராயத்திற் பங்கு கொண்டவர். சேனாதிபதியர் (பிற்கால மகா சாமந்தர்) ஐம்பெருங்குழுவிற் பங்கு கொண்டவர். போரில் தன் வலியைக் காட்டிய பெருவீரன் ‘ஏனாதி’ என்னும் பட்டம் பெற்றான். அரசன் அப்பட்டத்தைத் தந்து அவ்வீரனைப் பெருமைப்படுத்தல் மரபு. அச்சிறு விழாவில் பட்டம் பெற்றவன் பொற்பூ மோதிரம் முதலியன பெறுதல் மரபு, ஏனாதிப் பட்டம் பெற்ற இருவர் புறநானூற்றில் புகழப்பட்டுள்ளனர்; ஒருவன் ஏனாதி-திருக்கிள்ளி என்பவன். மற்றவன் ஏனாதி-திருக்குட்டுவன். ஏனாதி என்பது பெருமை தரும் பட்டப் பெயர். இவ்வீரர்கள் வீரச் செயல்களில் சிறந்து விளங்கினர். ஏனாதி-திருக்கிள்ளி' என்பதில் உள்ள ‘கிள்ளி’ என்பது சோழ அரசன் பெயராகும். பெரிய சாமந்தன் அல்லது அமைச்சன் அல்லது அரசியல் அலுவலாளன் தன் அரசன் பொதுப் பெயரையோ சிறப்புப் பெயரையோ வைத்துக் கொள்ளலைப் பிற்காலப் பல்லவர்-சோழர்-பாண்டியர் கல்வெட்டுகளிற் காணலாம். அங்ஙனமே பண்டைக் காலத்திலும் வைத்திருந்தனர் என்பதற்கு இஃதொரு சான்றாகும். அன்றி, சோழர் மரபினன் ஒருவனாகவே இவ்வீரனைக் கொள்ளினும் இழுக்காது. இந்த ஏனாதிப்பட்டம் கி.பி. 7,8,9-ஆம் நூற்றாண்டுகளிலும் சோழமன்னர் தம் தானைப் பெரு வீரர்க்கு வழங்கினர் என்பதற்குப் பெரிய புராணமே சான்றாகும். ஏன்? கி.பி.9-ஆம் நூற்றாண்டிற் பாடப்பெற்ற சுந்தரர் திருத் தொண்டத் தொகையே தக்க சான்றாகும்:

ஏனாதிநாதன்றன் அடியார்க்கும் அடியேன்”

என்றிவர் கூறுவதிற் காண்க. போர்ப் பயிற்சி அளிப்பதும் இவர் தம் தொழில் என்பதை பெரிய புராணத்தால் அறிகிறோம். இப்பட்டம் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகள் கொண்டு அறியலாம்.

அரசன் வேற்று நாட்டின் மீது போருக்குப் போகையில் வெற்றிவாள், கொற்றக்குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம், இங்ஙனம் செய்தல் வாள்நாட்கோள், குடைநாட்கோள், முரசு நாட்கோள் எனப்படும். அரசன் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும் பொழுது தன் படைவீரர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பன் போரினை மேற்கொண்ட பின்னாளில் படைகட்குப் பெருவிருந்து செய்து மகிழ்விப்பன்.

பட்டங்கள்: சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்ற பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்ற பட்டமும், வணிகர்க்கு எட்டி என்ற பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும்.

வீரக்கல்: போரில் இறந்துபட்ட வீரர்க்குக் கல்நட்டு, பெயரும் பீடும் எழுதி, பீலிசூட்டிச் சிறப்புச் செய்தல் மரபு. இப்பழக்கத்தால் வீரர்க்கு உற்சாகமும் காண்போர்க்கு நாட்டுப் பற்றும் உண்டாதல் இயல்பு. இவ்வீரக் கற்கள் இருந்த இடங்கள் நாளடைவில் கோவில்களாக மாறிவிட்டன. வீரக்கல் நடுதல்பற்றித் தொல்காப்பியம் விரித்துக் கூறல் காணத்தக்கது. கல்லைக் காண்டல், தேர்ந்தெடுத்தல், நீராட்டல், உருவந்தீட்டல், நடுதல் விழாச் செய்தல் முதலிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை நன்கு விளக்கிய பெருமை சிலப்பதிகாரத்திற்கே உரியது. வஞ்சிக்காண்டத்தில் பத்தினிக்குக் கல் எடுத்துச் செங்குட்டுவன் செய்த பலவகைச் செயல்களை நோக்குக. இப்பழக்கம் இன்றும் ‘கல் நாட்டல்’ ‘கல் எடுத்தல்’ என்னும் முறைகளில் இல்லந்தோறும் நடைபெறல் காண்க. கல்லில் வீரனது அரிய செயல் குறிக்கப் பட்டிருக்கும்; இன்ன போரில் இறந்தான் என்பதும் செதுக்கப்பட்டிருக்கும். இத்தகைக் கற்கள் பல பிற்காலப் பல்லவர், சோழர் காலங்களில் எழுந்தன. அவை இப்பொழுது கிடைத்துள்ளன. இவ் வீரக்கல் வழிபாடு புறநானூறு,[21] புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் நன்கு விளக்கப்பட்டுள.

போர்: பழந்தமிழ் அரசர் பெரும்பாலும் தாமே போரில் கலந்து கொள்வர், போர் வீரர்க்குப் புறப்படுமுன் பெருஞ் சோறு வழங்குவர்; அவரவர்க்குரிய சிறப்புச் செய்வர், போர்க் களத்தில் வீரர்க்கு ஊக்க மூட்டுவர். அரசர் போரில் புண்பட்டு வீழ்வராயின், அவர் வீரர்கள் போரை நிறுத்திவிடுவர். தோற்ற அரசன் வடக்கிருத்தல் வழக்கம். வடக்கிருத்தலாவது - பட்டினி கிடந்து வடக்கிலிருந்து உயிர் நீத்தல். போரில் இறவாது, வேறுவகையில் இறந்த அரசனது உடலைக் குசைப்புல் மீது கிடத்தி, வாளாற் போழ்ந்து போரில் மடிந்ததாகக் கருதி எரித்துவிடல் மரபாம். இங்ஙனம் செய்யின், அவன் ஆவி வீரர் துறக்கம் எய்தும் என்பது அக்கால மக்கள் கருத்து. தோற்ற அரசற்கு முடி அழித்துக் கடகம் செய்யப்படும். வாள், வேல், வில் என்பன போர்க்கருவிகள் ஆகும். போர் முரசம் ஒன்றுண்டு. போர் செய்யும் இரு திறத்தார்க்கும் போர் முறைக்கேற்ப அடையாள மலர்கள் உண்டு. மூவேந்தருள் இருவரை வென்ற ஒருவன் தன் மேம்பாடு விளங்கத் தோற்றவர் இலச்சினைகளைத் தன் இலச்சினையோடு சேர்த்து  வழங்கினான். அவன் ‘மும்முடி வேந்தன்’ என வழங்கப்பட்டான். யானைகள் கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்கள் தலையிற் பூச்சூடி மார்பில் மாலை சூடி இருப்பர். புறப்புண்படின், அவர் வீடு மீளார். வீரர் இறந்துகிடப்பின், அவ்விடத்தில் அவர் மனைவியர் வந்து ஆகந்தழுவி உவகைக் கண்ணிர் விட்டு உடன் இறப்பர்; சிலர் கைம்மை நோன்பு நோற்பர். புண்பட்டுத் திரும்பிய வீரர்க்குப் பெண்டிர் பெருஞ்சிறப்புச் செய்வர். வென்ற அரசன் தோற்ற அரசனது நாட்டைக் கொள்ளையடித்தலும் உண்டு; அந்த அரசன் செல்வத்தைக் கவர்ந்து வந்து புலவர், பாணர், வீரர், விறலியர், கூத்தர் முதலியோர்க்குக் கொடுத்து மகிழ்வன். இச்செய்திகள் அனைத்தையும் புறநானூற்றுப் பாக்களிற் கண்டு தெளியலாம்.

பெருநிலக் கிழவரும் அரசமரபினரும் கரிகள் மீது இவர்ந்து சென்றனர். தானைத் தலைவர்கள் தேர்களிற் சென்றனர்.

சில வேளைகளில் அரசர் போருக்கு முன் வஞ்சினம் கூறிச்செல்லல் மரபு. சோழன் நலங்கிள்ளி என்பான் போருக்குப் புறப்பட்ட பொழுது கூறியதாவது: “பகைவர் மெல்ல என்னிடம் வந்து ‘எமக்கு ஈயவேண்டும்’ என்று இரப்பாராயின், பழைமையாகிய எனது அரசாட்சி தருதல் எளிது; இனிய உயிரையும் கொடுப்பேன் அமைச்சர், படைத் தலைவர் முதலியோரது வலியுடைமை எண்ணாது என் உள்ளத்தை இகழ்ந்த அறிவற்றவன், யாவரும் அறியும்படி துயிலும் புலியை இடறின குருடன் போலப் பிழைத்தும் போதல் அரிதாகும். அப்பகைவனை யான் வெல்லாவிடின், பொதுப் பெண்டிரது பொருந்தாத சேர்க்கையில் எனது மாலை துவள்வதாகுக’ என்பது. இப்பாடலால், சோழன் நலங்கிள்ளியின் அறவுணர்ச்சியும் ஒழுக்க மேம்பாடும் வீரவுணர்ச்சியும் நன்கறியலாம் அன்றோ?

அரசன் பற்றிய விழாக்கள்: அரசன் பிறந்த நாள் விழா ஒவ்வோர் ஆண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். அப்பொழுது அரசர்கள் மங்கலவண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யா தொழிந்து, சிறைவிடுதல், சிறை தவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச்செயல்கள் செய்வர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும்.இங்ஙனமே அரசன் முடிபுனைந்த நாள் தொடங்கி ஒவ்வோர் ஆண்டிலும் முடிசூட்டு நாளும் கொண்டாடப்பெறும். இது முடி புனைந்து நீராடுதலின், மண்ணுமங்கலம் எனப்பெயர் பெறும். இதன் விரிவு தொல்காப்பியத்துட் காணலாம்.

முத்தமிழ் வளர்ச்சி: போர் ஒழிந்த ஏனை நேரங்களில் எல்லாம் அரசன் புலவருடனே இருந்து காலத்தை இன்பமாகக் கழித்தல் மரபு. புலவர் அவனுடைய சிறந்த இயல்புகளைப் புகழ்வர் குற்றங்கண்ட இடத்துக் கடிவர். இதற்குக் கோவூர் கிழாரே சான்றாவர். போர் ஒரே மரபினருக்குள் நடப்பினும் புலவர் சந்து செய்ய முற்படுவர்; பெரும்பான்மை வெற்றி பெறுவர். அரசன் போரில் வெற்றி பெற்று மீளின், அவனது பெருஞ் சிறப்பைப் பாடுவர்; அவன் இறப்பின், புலவர் சிலர் உடன் இறப்பர். அரசனது நாளோலக்கம் சிறப்புடையது. அங்கே ஆடுமகளிர், பாடுமகளிர், பாணர், கூத்தர் முதலியோர் ஆடல்பாடல்களில் பங்கெடுத்துக் கொள்வர். இப்பாணரால் இசைத்தமிழ் வளர்ந்தது. கூத்தரால் நாடகத் தமிழ் வளர்ந்தது; புலவரால் இயற்றமிழ் வளர்ந்தது. இங்ஙனம் ஒவ்வொரு மரபினரும் (சோழர் உட்பட) முத்தமிழைப் போற்றி வளர்த்தனர். தன்னைக் காணவரும்புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு அரசன் அவரவர் தகுதிக்கேற்றவாறு பரிசில் வழங்குவன்; பெரிய புலவராயின், யானையும் நல்குவன். சிறந்த புலவரைப் பல மாதங்கள் இருந்து போகும்படி அரசனே வற்புறுத்து வான். அரண்மனையில் எப்பொழுதும் விருந்தும் இசையும் கூத்துமே குடிகொண்டிருக்கும்.அரசன் எல்லாரையும் உடன் வைத்து உண்ணுதல் வழக்கம். இரண்டாம் கரிகாற் சோழன் அரண்மனைச் செய்திகளைப் பொருநர் ஆற்றுப் படையில் பரக்கக் கண்டு தெளியலாம். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறச்செயலைப் புறப்பாட்டால் நன்கறியலாம்.

பெண்பாற் புலவர்: சங்ககாலப் புலவர் ஏறத்தாழ 700ஆவர். அவருட் பெண்பாலரும் இருந்தனர். அவருள் - ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி,குறமகள் குறியெயினி, காவற்பெண்டு, கழாற்கீரன் எயிற்றியார், காமக்கணிப் பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங்கண் உத்திரையார், பொன்முடியார், மாறோகத்து நப்பசலையார், போந்தைப் பசலையார், அள்ளுர் நன்முல்லையார், பாரிமகளிர், பத்தினி (கண்ணகி), பூதப்பாண்டியன் மனைவி முதலியோர் குறிப்பிடத் தக்கவர், இவருள் காக்கை பாடினியார் யாப்பிலக்கணம் செய்தவர் எனின், அம்மம்ம! அக்காலப் பெண்புலவர் பெருமையை என்னென்பது!

பாடினியர் இசைத்தமிழை வளர்த்தனர், கூத்தியார் நாடகத் தமிழை வளர்த்தனர். இவர் அனைவர்க்கும் அாசன் பரிசில் வழங்கிச் சிறப்புச் செய்வது வழக்கம். புலவர் அனைவருடைய பாக்களும் தன்மை நவிற்சியே உடையவை; அஃதாவது, உள்ளதை உள்ளவாறு உரைப்பவை: உயர்வு நவிற்சி அற்றவை படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை. ஆதலின், அக்கால அரசர் புலவரைப் போற்றித் தம் தாய்மொழியையும் போற்றினர். கடியலூர் ருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை பாடியதற்காக 15 நூறாயிரம்  பொன் பரிசில் பெற்றார் என்று சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிற் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர் பலர் உயர்தரப் பரிசுகளும் ஊர்களும் பெற்றனர். இக்கூற்றுகளில் பாதியளவேனும் உண்மை இருத்தல் கூடும். இங்ஙனம் பண்டை அரசர், புலவரைப் போற்றினமையாற்றான் பல நூல்கள் வெளிவந்தன. நமது பேறின்மை காரணமாகப் பல இக்காலத்து இல்லா தொழிந்தன. பரிசில் பெற்ற புலவன் மற்றொரு புலவனைத் தன் வள்ளலிடத்தே ஆற்றுப்படுத்தும் முறை அழகியது. கூத்தன் வேறொரு கூத்தனைத் தன் புரவலன் பால் ஆற்றுப்படுத்தல், பொருநன் வேறொரு பொருநனைத் தன் அரசனிடம் ஆற்றுப்படுத்தல், பாணன் மற்றொரு பாணனை இங்ஙணம் ஆற்றுப் படுத்தல் முதலியன பத்துப்பாட்டு எனும் நூலில் கண்டு களிக்கலாம். அரசன் எல்லார்க்கும் பேருதவி புரிந்து வந்தமையின் புலவர்க்குள்ளும் பாணர்க்குள்ளும் ஒற்றுமை நிலவி இருந்தது. ஒரு புலவன் மற்றொரு புலவனை மனமாரப் புகழ்ந்து பாடியிருத்தலை அப்பாக்களில் காணலாம்.இங்ஙனம் அரசர்பால் தண்ணளியும் புலவர்பால் ஒற்றுமையும் இருந்தமையாற்றான், அக்காலத்தில் முத்தமிழும் செழித்தோங்கின. தமிழர் தருக்குடன் வாழ்ந்தனர். இந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்தாண்ட பிந்து சாரனிடம் தமிழகம் அடிமைப்படாதிருந்தது!

இசையும் கூத்தும்: இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் விளக்கமாகக் காணலாம். அக்காதைக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையே ஊன்றிப் படித்தற்குரியது. ஏறக்குறையக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினரான அவர் கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலாகிய சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதினர். அவர் காலத்தில் பலவகைக் கூத்து நூல்களும் இசை நூல்களும் இருந்திராவிடில், அவர் உரை வரைந்திருத்தல் இயலாதன்றோ? அந்நூல்கள் இருந்தமைகொண்டே சங்க காலத்து இசை நாடக மேம்பாட்டை நாம் நன்று உணரலாமன்றோ? நாடக மகள் அரசர்க்குரிய நடன வகைகள், பொது மக்கட்குரிய நடன வகைகள், பாடல், தோற்கருவி.துளைக்கருவி.நரம்புக் கருவிகளைக் கொண்டு பாடல், ஒவியம் தீட்டல், பூ வேலை செய்தல் முதலிய பல கலைகளில் பல்லாண்டுகள் பழகித் தேர்ச்சியுறல் வேண்டும் என்று மணிமேகலை கூறுகின்றது. பலவகை யாழ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆடல் ஆசிரியன், இசை ஆசிரியன் முதலிய ஆசிரியன் மார் குறிக்கப்பட்டுள்ளனர். அரங்கேற்று காதையிற் குறிக்கப்பட்ட பல செய்திகள் இன்று அறியுமாறில்லை எனின், அக்கால இசைச் சிறப்பையும் நடனச் சிறப்பையும் என்னெனக் கூறி வியப்பது!

இசைக்கருவிகள்: அக்காலத்து இருந்த இசைக் கருவிகளாவன : அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என ஏழுவகையாற் பகுக்கப்படும். பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதும்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுனிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற் கருவிகளும், வங்கியம், குழல் என்னும் துளைக் கருவிகளும்; பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரம்புக் கருவிகளும் பிறவும் ஆகும்.

இசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையாலும் பிறக்கும் பண்விகற் பங்களும் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய இசைகளும் தமிழ்ப் பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன. 

பலவகைக் கூத்துகள்: வேதியல், பொதுவியல் என்னும் இருதிறமுடைய அகக்கூத்து, புறக்கூத்துகளும், குரவை, களிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு தோற்பாவை என்னும் வினோதக் கூத்துகளும்; அம்மானை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சிவாரிச்சி, சிந்துப் பிழுக்கை, குடப் பிழுக்கை, பாண்டிப்பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி முதலிய பலவகை வரிக்கூத்துகளும் பிறவும் சங்க நாளில் நடிக்கப்பெற்று வந்தன.

நகர வாழ்க்கை: புகார் போன்ற பெரிய நகரங்களில் செங்கல், சுண்ணாம்பால் ஆகிய மாடமாளிகைகள் மிக்கு இருந்தன. அவற்றின் சுவர்கள் மீது தெய்வங்கள், விலங்குகள் இவற்றைக் குறிக்கும் வியத்தகு ஒவியங்கள் தீட்டப் பெற்று இருந்தன. பல மாளிகைகள் அழகிய பூஞ்சோலைகள் சூழப்பெற்றிருந்தன. அச்சோலைகளில் ஆழமற்ற கிணறு அல்லது குளம், பளிங்கு அறை அல்லது அழகிய அறை, செய்குன்று இன்ன பிறவும் இன்ப விளையாட்டுகளுக்காக அமைக்கப்பட்டிருந்தன.

மணமுறை: சங்க நூல்களில் இருவகை மணமுறைகள் கூறப்பட்டுள; ஒன்று பழந்தமிழர் மணமுறை; பின்னது சிலப்பதிகார காலத்தது. முன்னதில் (1) இசைக்கருவிகள் ஒலிப்பு (2) கடவுள் வணக்கம் (3) மணப் பெண்ணைப் பிள்ளை பெற்ற பெண்டிர் நால்வர் கூடி அரிசியும் மலரும் கலந்த நீரால் ‘பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக’ என வாழ்த்தி நீராட்டல், (4) அன்றிரவே மணமக்களை இல்லறப்படுத்தல், (5) மனவிருந்து ஆகிய இவையே சிறப்பிடம் பெற்றுள்ளன. “இம்மணமுறையில், (1) எரிவளர்த்தல் இல்லை (2) தீ வலம் வருதல் இல்லை; (3) தக்‌ஷிணை பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” என்று திரு.பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளது கவனித்தற்குரியது.

சிலப்பதிகாரம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. அந்நூலில் கோவலன், கண்ணகி மணம் முதற்காதையுள் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் யானை மீது சென்று மாநகரத்தார்க்கு அறிவித்தலே புதுமையானது. அத்திருமணத்தில் (1) மாமுது பார்ப்பான் மறை வழி காட்டல் (2) தீ வலம் செய்தல், (3) பாலிகையின் தோற்றம் என்பன புதியவை. அம்மறையவன் ‘சமணப் பெரியோன்’ என்பர் ஆராய்ச்சியாளர். ‘கோவலனும் கண்ணகியும் சமணர் ஆதலின், வேத முறைப்படி மணந்திரார்-சமண முறைப்படியே மணந்தனராவர்’ என்பர் அவ்வறிஞர். மணம் முடிந்த பிறகு மன மக்கள் வாழ்த்தப் பெற்றனர். பின்னர் அனைவரும் சோழ வேந்தனை வாழ்த்தி மண நிகழ்ச்சியை முடித்தனர்’ என்பது சிலப்பதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது.

பூம்புகார்: இந்த நகர வருணனை சிலப்பதிகாரம் ஐந்தாம் காதையுள் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. நகரம் காவிரியாற்றின் வடகரையில் அமைக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. இரண்டிற்கும் இடையில் திறந்த வெளி உண்டு. அங்கு மரத்தடிகளில் கடைகள் இருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையை அடுத்து உயர்ந்த மாடமாளிகைகள் இருந்தன. செல்வாக்கு நிறைந்த யவனர் மாளிகைகள் இருந்தன; வாணிகத்தின் பொருட்டு வந்திருந்த பல மொழி மக்கள் தம்முள் வேற்றுமையின்றி நெருங்கி வாழ்ந்து வந்தனர். பலவகை மணப்பொருள்கள், பட்டாடை, பருத்தியாடை , கம்பள ஆடை முதலியன, பலவகைப் பூமாலைகள், இவற்றைச் செய்யும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர் உள்ளிட்ட பலவகை வணிகர்; பொற்கொல்லர், கன்னார், கருமான், தச்சன் முதலியோர், ஒவியம் திட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள் முதலிய பலதிறப்பட்டவரும் மருவூர்ப்பாக்கத்தில் உறைந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரசன் மாளிகை உடைய அகன்ற அரசர் தெருவும் தேரோடும் தெருவும் அங்காடித் தெருவும் இருந்தன. செல்வத்திற் சிறந்த வணிகர், நிலக்கிழவர், மறையவர், மருத்துவர், சோதிடர் முதலியோர் வாழ்ந்தனர். அரண்மனையைச் சுற்றிக் கரிவிரர், பரிவீரர், சேனைத் தலைவர் முதலியோர் உறையும் தெருக்கள் இருந்தன. புலவர், பாணர், இசைவாணர், மாலை தொடுப்பதில் வல்லார், முத்து வேலை செய்வோர், நாழிகை கூறுவோர், அரண்மனை அலுவலாளர் முதலிய பல திறத்தவரும் பட்டினப் பாக்கத்தில் உறைந்தனர்.

புகார் சிறந்த துறைமுகத்தைப் பெற்றிருந்தது. அரசரது பெருஞ் செல்வ நகரம், மாலுமிகள் நிறைந்த நகரம், கடல் சூழ்ந்த உலகமே வறுமை உறினும் தான் மட்டும் வறுமை உறாதது; வெளிநாட்டுப் பொருள்களும் உள்நாட்டுப் பொருள்களும் வண்டிகளில் போதலையும் வருதலையுங் கான, பல நாட்டுப் பண்டங்களையும் சாலையாகப் புகார் நகரம் காட்சி அளித்தது. அக்கோ நகரத்தின் செழுமை இமயம் அல்லது பொதியம் போன்ற உறுதிப்பாடு உடையதாகும். இந்நகர வருணனை பட்டினப்பாலையிற் காண்க. பெரிய கப்பல்கள் புகார்த்துறைமுகத்தை அடைந்து  பண்டங்களை இறக்கும். நகரக் கடைவீதியில் உயர்ந்த மாடமாளிகைகள் உண்டு. அவற்றைச் சுற்றிலும் நாற்புறங்களிலும் மேடைகள் உண்டு. அவற்றை அடையப் படிக்கட்டுகள் உண்டு. அம்மாளிகையில் பல அறைகள் சிறியவும் பெரியவுமாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் கதவுகள் உண்டு. சுவர்களில் சாளரங்கள் உண்டு. மேல் மாடங்களிலிருந்து செல்வ மகளிர் கரங்களைக் குவித்து முருகனை வணங்கும் காட்சி-உயர்ந்த மலைப் பாங்கரில் செங்காந்தள் மலர்க்கொத்துகள் இருத்தலைப் போல இருக்கும். முருகக் கடவுள் ஊர்வலம் வரும்பொழுது இசையும் நடனமும் இடம் பெறும் பலவகைக் கருவிகளின் ஒசையும் தெருக்களில் ஒன்றுபடும்; ஆடலும் பாடலும் நடைபெறும்.

நகரத்தின் பல பகுதிகளிலும் பலவகைக் கொடிகள் காட்சி அளிக்கும். சில கொடிகள் வழிபாடு பெறத்தக்கவை. சில வெள்ளைக் கொடிகளுக்கு அடியில் உயர்தரப் பொருள் கொண்ட பெட்டிகட்கு வழிபாடு நடைபெறும். பல கலைகளில் வல்லார் கொடி நட்டுப்பிறரை வாதுக்கழைப்பர். துறைமுகத்தில் கப்பல் மீதுள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடும் தோற்றம் அழகியதாக இருக்கும். வேறு பல கடைகளில் அவற்றின் தன்மையை உணர்த்தத்தக்க கொடிகள் கட்டப்பட்டு இருக்கும்.

இன்றைய புகார்: மாயூரத்திலிருந்து காவிரிப்பூம் பட்டினம் போகும் பாதையில் 20 கி.மீ. அளவில் கைகாட்டி மரம் ஒன்று இருக்கின்றது.அதிலிருந்து கடற்கரைவரை ஒரே சாலை 5 கிமீ தொலைவிற் போகின்றது. அதன் இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. அங்கிருப்பவர் பழங்குடி மக்கள். இரண்டு அக்கிரகாரங்கள் இருக்கின்றன. அங்கு மறையவர் இருக்கின்றனர். சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதைகள் மேடு பள்ளங்கள் உடையன. சாலைக்கு இடப்புறமே சிறு குடியிருப்புகள் மிகுதியாக இருக்கின்றன. சாலைக்கு இருபுறத்திலும் பழைய உறை கிணறுகள் காணக் கிடக்கின்றன. ‘இங்கு நாங்கள் கிணறுகள் தோண்டுவதில்லை. இவையெல்லாம் பழைய காலத்துக்கிணறுகள்’ என்று அங்குள்ளவர் கூறுகின்றனர். நெடுந்தெருவிற்கு இடப்புறம் சிறிது தொலைவில் பெருந்திடல்கள் இருக்கின்றன; ‘இவை அக்கிரகாரம் இருந்த இடம்; வேளாளர் தெரு இருந்த இடம் என்று எங்கள் பாட்டனார் சொல்லக்கேட்டோம்’ என்று 80 வயதுடைய கிழவர் ஒருவர் சொன்னார். அந்தத் திடல்களைச் சுற்றிலும் வயல்கள் இருக்கின்றன. திடல்கள் மட்டும் தோண்டப்பட்டில. எங்குத் தோண்டினும் பழைய செங்கற்கள், மட்பாண்டச்சிதைவுகள் காணக் கிடக்கின்றன. அவற்றுள் சில, புதுவையை அடுத்துள்ள அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்துள்ளன. ஓரிடத்தில் பழைய செங்கற்கள் 3 மீ ஆழத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றை அளந்தேன்; நீளம் 23 செமீ அகலம் 15 செ.மீ. கனம் 4 செ.மீ. அதற்கும் புதிய கற்களுக்கும் வேறுபாடு நன்கு தெரிகிறது.

கோவில்கள்: இவ்வைந்து கி.மீ. நீளமுள்ள பாதை நெடுகப் பல சிறிய பழைய கோவில்கள் இருக்கின்றன. இவை பலவகைப்பட்டவை (1) கீற்றுக் கூரையும் சுவர்களும் உடைய கோவில்கள் (2) மண் சுவர்களும் கீற்றுக் கூரையும் உடைய கோவில்கள் (3) செங்கற் சுவர்களும் ஒட்டுக் கூரையும் கொண்ட கோவில்கள், ஒரே அறை, அதைச் சுற்றிலும் நாற்புறமும் அகன்ற திண்ணை; அறையுள்ளே சுதையால் இயன்ற சிலைகள் சுவர்கள் மீது கடவுளர் ஒவியங்கள், சில உள்ளறைகளில் கற்சிலைகள் இருக்கின்றன. கூரை மீது கலசம் கொண்ட கோவில்கள் பல. சில இடங்களில் மூன்று கலசங்கள் இருக்கின்றன. இத்தகைய பழைய கோவில்கள் பிற இடங்களில் காண்டல் அருமை.

ஏறக்குறைய இவற்றைப் போலவே பழைய சங்ககாலக் கோவில்கள் பல இருந்திருக்கலாம் என்றெண்ணுதல் தவறாகாது. சில கோவில்களில் சிலை இல்லை; சுவர் மீது கடவுள் உருவம் திட்டப்பட்டுள்ளது. அதற்கு வழிபாடு நடந்து வருகிறது. இங்ஙனமே தாண்களிலும் கடவுளர் உருவங்கள் காண்கின்றன. இவற்றை நோக்கிய பொழுது எனக்குக் கந்திற்பாவை நினைவிற்கு வந்தது.

காவிரிக்கு வலப்புறம்: காவிரிக்கு அப்பால் மேடான இடம் பரந்து கிடக்கிறது. அதுவே பழைய பூம்புகார் நகரத்தின் சிறந்த பகுதி என்று அங்குள்ளார் கூறுகின்றனர். அம்மேட்டின் மீது பரதவர் குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். அவ்வழி வந்த அம்மை ஒருத்தியைக் கண்டு அங்குத் தோண்டிப் பார்த்தீர்களா?' என்று கேட்டேன். அவ்வம்மை, ‘அங்கு அகழ்ந்தது இல்லை’ என்று விடையிறுத்தாள். நான் திடுக்கிட்டேன். ஏன்?

“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

என்ற குறள் நினைவிற்கு வந்தது.இக்காலத்தில் பண்டிதரும் பயன்படுத்தாத அகழ்தல் என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கல்வி அறிவற்ற ஓர் அம்மை எளிமையாக உச்சரித்தாள் என்பது வியப்பே அன்றோ? பூம்புகார் அழிந்தாலும் பூம்புகார்க் காலத்துத் தமிழ்ச் சொல் அழியவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். சங்க முகத்துறையில் தமிழ் உணர்ச்சியுடையார் நிற்பின், சங்ககால நினைவு எழும்  என்பதிலோ - மாதவி பாடிய கானல் வரிப்பாடல் நினைவு எழும் என்பதிலோ ஐயம் இல்லை; இல்லை!!

சாய்க்காடு: இது பாடல்பெற்ற சிவனார் கோவிலாகும். இது பெரு வழியில் ஏறக்குறைய ஒன்றரைக் கல் தொலைவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கிறது. அதைச் சுற்றி நீண்ட கூடம் கூரையுடைய தாய்ச் செல்கிறது. கோவிலுக்குக் கோபுரம் இல்லை. சுற்றுச் சுவர் பழுதுபட்டிருக்கிறது. கோவில் மாடக் கோவில் ஆகும். சிவனார்க்கு நேர் எதிரே உள்ள சிறு வாசல் யானை புக முடியாதது. அம்மனுக்கு எதிரே உள்ள வாசலே பொது வாசலாகும். அந்த வாசல் கல்தேர் உருளைகளுடனும் கற்குதிரைகளுடனும் காட்சி அளிக்கின்றன. தேருக்கு இரண்டு பக்கம் வாயிற் படிகள் இருக்கின்றன. அப்படிகள் மீது ஏறியே கோவிலுக்குள் செல்ல வேண்டும். பிராகார மட்டத்திற்கு உட்கோவில் மட்டம் ஆறடி உயரமானது. இவ்வழகிய கோவில் ‘சிலந்திச் சோழன்’ கட்டியதென்று அர்ச்சகர் அருளிச் செய்தார். கோவிலைச் சுற்றி முள் நிறைந்திருக்கின்றது. கோவில் நன்னிலையில் இராததற்கு தமிழ் மக்கள் - சிறப்பாகச் சைவ நன்மக்கள் கவனிப்பின்மையே காரணம் எனலாம். ‘சிவனடியார் பலர் புகழ்ந்து பாடிய சாய்க்காடு - பாடலும் ஆடலும் அறாத சாய்க்காடு என்று கி.பி. 650-இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற இக்கோவில் பழைமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. இஃது சிலந்திச் சோழன் கட்டியதெனின், இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எனக்கூறல் தவறாகாது. பூம்புகாரின் ஒரு பகுதி கடல் கொண்ட பின், எஞ்சிய பகுதிக்கும் சாய்க்காட்டிற்கும் இடையே காடு வளர்ந்து விட்டது என்பதை இயற்பகை நாயனார் வரலாற்றால் இனிதுணரலாம்.

பல்லவன் ஈச்சரம்: சாய்காட்டுக் கோவிலுக்கு அரை கி.மீ. தொலைவில் கடற்கரை நோக்கிப் போகும் பாதையில் இருப்பது பல்லவன் ஈச்சரம் என்னும் திருக்கோவில் ஆகும். இதுவும் பாடல் பெற்றது.கி.பி.650-லேயே இஃது இப்பெயர் பெற்றதெனின், அதற்கு முந்தியே இக்கோவில் பல்லவ அரசன் ஒருவனால் கட்டப் பெற்றதாகவோ - வழிபாடு செய்யப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ? எனவே, இக்கோவில் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய கோவிலாகும் என்பதில் ஐயமில்லை; மூல லிங்கம் பட்டை இட்டதன்று. கோவில் நகரத்தாராற் புதுப்பிக்கப் பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள பிள்ளையார் கோவில் துரபி துரங்கும் சிங்கம் வடிவில் அமைந்துள்ள அழகு பார்க்கத்தக்கது.

பூம்புகாரின் பிற்சிறப்பு: இக்கோவில் ‘பல்லவன் ஈச்சரம்’ எனப் பெயர் பெற்றமையாலும், பெரிய பல்லவ வேந்தனாகிய மஹேந்திரன் காலத்தில் இஃது இருந்தமை யாலும், அவனுக்கும் முற்பட்ட காலத்திலே இஃது இயன்றதாதல் வேண்டும். அஃதாவது இடைப் பட்ட பல்லவர் காலத்திலேனும் (கி.பி. 350-600) கட்டப் பெற்றதாதல் வேண்டும். அங்ஙனமாயின், அக்காலத்தே காவிரிப்பூம் பட்டினம் தன் பழம் பெருமையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தானே பெறப்படுகின்ற தன்றோ? என்னை? கி.பி. 450-இல் வாழ்ந்த புத்ததத்தர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்திருத்தலாலும், இயற்பகை நாயனார் காலத்தில் பூம்புகார் சிறப்பாக இருந்திருத்தலாலும், தேவார காலத்திலும் மாடமாளிகைகள் இருந்தன என்று சம்பந்தர் கூறலாலும் என்க. எனவே, இடைக்காலப் பல்லவர் காலத்திலும் பிற்காலப் பல்லவர் காலத்திலும், ஏறத்தாழக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முடியவேனும் பூம்புகார் சிறப்புற்ற நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் என்று கோடலில் தவறில்லை. 

கடல் வாணிகம்: அயல்நாட்டு வாணிகம் சிறப்புற நடந்து வந்ததால் பல நாட்டு வாணிகர் தம் உற்றார் உறவினருடன் புகாரிற் கூடி வாழ்ந்தனர். பரிகள் மிகுதியாக வந்து இறங்கின. மிளகுப் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன; வடமலைகளிலிருந்து மணிகளும், பொன்னும், மேற்கு மலையிலிருந்து அகிலும் சந்தனமும், தென்கடலிலிருந்து முத்துகளும், மேற்கடலிலிருந்து பவளம், கங்கைச் சமவெளிப் பொருள்களும் காவிரிச் சமவெளிப் பொருள்களும் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈழத்திலிருந்து உணவுப் பண்டங்களும் கடாரத்திலிருந்து (மலேயா) பலவகைப் பண்டங்களும் மூட்டை முட்டையாக இறக்குமதி ஆயின.

இச்செய்திகளைப் பெரிப்ளுஸ், என்னும் நூலுடனும், பிளைநி, தாலமி முதலியவர் வரைந்த நூல்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் நூற்செய்திகள் அனைத்தும் உண்மை என்பதை அறியலாம். ‘இந்திய நாட்டு அரசர் அந்தப்புரங்கட்கு ரோம வணிகர் ஆண்டுதோறும் அழகிய நங்கையரைக் கொண்டு செல்கின்றனர்’ என்று பெரிப்ளூஸ் ஆசிரியர் கூறியிருத்தல் காண்க. இஃது உண்மை என்பதைச் சில இந்திய நாடக நூல்கள் மெய்ப்பிக்கின்றன. ரோமர் தயாரித்த பட்டயத்தில் இந்தியத் தொடர்பான செய்திகளில் திண்டிஸ் (தொண்டி), முசிரிஸ் (முசிறி) என்பன காணப்படுகின்றன. ஏராளமான ரோம நாணயங்கள் தமிழகத்தின் கீழ்க்கரை ஓரமாகக் கிடைத்தலை நோக்க, யவனர் முதலிய மேனாட்டார் இங்குத் தங்கி வாணிகம் செய்தமை நன்கு விளங்கும். ‘சீனத்திற்கும் மேற்கு நாடு கட்கும் நடந்த கடல் வாணிகத்தில் தென் இந்தியா நடுவிடமாக இருந்து பல நூற்றாண்டுகள் செழித்த வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது’ என்று கூறும் சீனர் குறிப்புகளும் நினைவு கூர்தற்குரியன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த கடல் வழி வாணிகமே உயர்ந்ததாகும். பண்டை வாணிகத்தில் ரோமப் பேரரசு ஆண்டுதோறும் இந்தியா, சினம், அரேபியா ஆகிய நாடுகட்கு ஏறத்தாழ 10,87,500 பவுன்கள் பெறத்தக்க பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து வந்தது. பருவக் காற்று நிலையும் ரோமர் போக வாழ்க்கையும் கடல் வாணிகத்தைப் பெருக்கியது. இதற்கு நடுநாயகம் அலெக்சாண்ட்ரியாவாக இருந்தது. அகஸ்டஸ் பேரரசர்க்குப் பிறகு அரேபியத் துறைமுகங்கள் தம் செல்வாக்கை இழந்தன. எகிப்திற்கும் இந்தியாவிற்கும் நேரே வாணிகம் நடக்கலாயிற்று. பெரிப்ளுஸ் காலத்தில் இந்நேர்வழி உண்டாகிவிட்டது. பண்ட மாற்றம் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து பருத்தியும் பட்டும் சிறப்பாகச் சென்றன. இவ்விரண்டும் அலெக்சாண்ட்ரியாவில் இருந்த தொழிற்சாலைகளில் ஆடைகளாக நெய்யப்பெற்றன. பதிலுக்குக் கண்ணாடிப் பொருள்கள், உலோகத் தகடுகள் மெல்லிய ஆடைகள் இன்னபிறவும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. இந்தியாவிற்கும் ரோமப் பெருநாட்டிற்கும் நடந்த வாணிகத்தின் சிறப்பைப் பெரிப்ளுஸ் நூலிலும் தாலமி வரைந்துள்ள நூலிலும் இருந்தே நன்கறியலாம். ரோம நாட்டிலிருந்து வரும் பொருள்களைச் சுமத்ரா, மலேயா முதலிய இடங்கட்கு மேல் கரை நாட்டிலிருந்து கொண்டு சென்றவர் தமிழரே. ஆவர். அவர்கள் அக்காலத்தில் திரை கடல் ஓடி வாணிகம் செய்தனர்.[46] இத்தகைய செழுமையான வாணிகம் அலெக்சாண்ட்ரியப் படுகொலை நிகழ்ச்சிவரை செம்மையாக நடைபெற்று வந்தது.

இங்ஙணம் நடைபெற்று வந்த வாணிகத்திற் கீழ்க்கரை ஒரமாக நடந்த பகுதியில் பெரும் பங்கு கொண்டவர் சோழரே யாவர். சோழ நாட்டுத் துறைமுகங்களில் கடலோரமே செல்லத்தக்க கப்பல்கள் பல இருந்தன. ‘சங்கரா’ என்னும் பெயர் கொண்ட பெரிய கப்பல்களும் இருந்தன.